லசந்த விக்ரமதுங்கவின் மகள் அனுப்பிய கடிதம் கிடைத்தது : நீதியை பெற்றுக் கொடுக்கும் நிலைப்பாட்டில் உறுதியாகவே இருக்கிறோம் : தேவையெனின் புதிதாக வழக்குத் தொடுக்கப்படும் என்றார் பிரதமர் ஹரினி - News View

About Us

About Us

Breaking

Friday, February 7, 2025

லசந்த விக்ரமதுங்கவின் மகள் அனுப்பிய கடிதம் கிடைத்தது : நீதியை பெற்றுக் கொடுக்கும் நிலைப்பாட்டில் உறுதியாகவே இருக்கிறோம் : தேவையெனின் புதிதாக வழக்குத் தொடுக்கப்படும் என்றார் பிரதமர் ஹரினி

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பில் அவரது புதல்வியினால் அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் தமக்கு கிடைத்துள்ளதாகவும், லசந்த விக்கிரமதுங்கவிற்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க அரசாங்கத்தினால் எடுக்கப்படக்கூடிய அனைத்து சட்ட ரீதியான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் எனவும், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று (07) வெள்ளிக்கிழமை நடைபெற்ற அமர்வின்போது படுகொலை செய்யப்பட்ட பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் மகள் அரசாங்க தரப்புக்கு அனுப்பி வைத்துள்ள கடிதம் மற்றும் லசந்த விக்கிரமதுங்க படுகொலை  விசாரணைகள் தொடர்பில் சிவில் தரப்பினர் முன்னெடுத்துள்ள போராட்டங்கள் குறித்து ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் உரையாற்றினார்.

ரவூப் ஹக்கீம் கூறுகையில், படுகொலை செய்யப்பட்ட லசந்த விக்கிரமதுங்க தொடர்பில் பத்திரிகைகளில் பிரதான செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்கு சட்டமா அதிபர் திணைக்களம் பொறுப்புக்கூற வேண்டும். தேசிய மக்கள் சக்தியின்  தேர்தல் விஞ்ஞாபனத்தில் லசந்த விக்கிரமசிங்க உட்பட  பல படுகொலைக்கான நீதி தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சட்டமா அதிபர் திணைக்களத்தை  அடிப்படையாகக் கொண்டு தற்போது பிரச்சினைகள் தோற்றம் பெற்றுள்ளன. சட்டமா அதிபர் திணைக்களத்தில் சிறந்த அதிகாரிகள் உள்ளார்கள். இருப்பினும் ஒரு சில பிரச்சினைகள் காணப்படுகின்றன. படுகொலை செய்யப்பட்ட  லசந்த விக்கிரமதுங்க விவகாரம் தேசிய பிரச்சினையாகவே பார்க்கப்படுகிறது. ஆகவே  இவ்விடயம் தொடர்பில் முழு  நாள் விவாதத்தை  நடத்த வேண்டும். ஏனெனில், இவ்வாறான பிரச்சினைகள் இனி தோற்றம் பெறக்கூடாது என்றார்.

இதற்கு எழுந்து பதிலளித்த  பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, “இவ்விடயம் தொடர்பில் எமது அரசாங்கத்தின் நிலைப்பாடு மிகவும் தெளிவானது. லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பில் நீதியைப் பெற்றுக் கொடுக்க நாம் தயாராக உள்ளோம். இதற்கு முன்னரும் நாம் இதே நிலைப்பாட்டிலேயே இருந்தோம். தற்போதும் இந்நிலைப்பாட்டையே நாம் கொண்டுள்ளோம்.

படுகொலை செய்யப்பட்ட லசந்த விக்கிரமசிங்கவுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் என்றும் உறுதியாகவே இருக்கிறோம். 

லசந்தவின் மகளான அஹிம்சா  விக்கிரமதுங்க அனுப்பிவைத்த கடிதம்  எனக்கு கிடைத்தது. அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை பார்த்து வேதனையடைந்தேன். அதிகளவில் கரிசணை கொண்டுள்ளேன். பதில் கடிதம் அனுப்புவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளேன்.

அகிங்சாவின் கவலையும், அவருக்கு இவ்வேளையில் ஏற்படும் வேதனையையும் என்னால் நன்கு உணர முடிகின்றது.

இவ்விடயம் தொடர்பில் நீதியை நிலைநாட்டுவதற்கு நாம் இயலுமான அனைத்து விடயங்களையும் மேற்கொள்ளுவோம் என அவருக்கு உறுதியளிக்கின்றேன். 

நீதிமன்றம், சட்ட மா அதிபர் திணைக்களம் நீதியை நிலைநாட்டுவதற்காகவே செயற்படுகிறது. அதற்கான சூழலை அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுக்கும். 

சட்டமா அதிபர் திணைக்களத்தில்  சிறந்த அதிகாரிகள் உள்ளார்கள். இருப்பினும்  திணைக்களம்  ஒரே போக்கில் செயற்படுகிறது. இவ்விடயம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தியுள்ளோம். 

இது தொடர்பில் ஜனாதிபதியுடனும் விரிவான கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது. தற்போதைய நிலைவரம் குறித்து ஜனாதிபதி சட்டமா அதிபருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். 

இது தொடர்பாக புதியதொரு விசாரணையை ஆரம்பிப்பதற்கோ அல்லது சாட்சியங்களை மீண்டும் மறுபரிசீலனை செய்யவேண்டியேற்படின், அது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கோ ஆவனம் செய்யப்படும்.

தேவையெனின் புதிதாக வழக்குத் தொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுவது மட்டுமல்லாமல், நீதியை நிலைநாட்டுவதற்கும் எடுக்க வேண்டிய அனைத்துவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

சட்டமா அதிபர் திணைக்களம் அரசியல் பிடிக்குள் சிக்குப்படாமல் இருப்பதற்கும், நீதியை நிலைநாட்டுவதற்கும் அரசாங்கம் பொறுப்புடன் செயற்படும் என்பதை குறிப்பிட்டுக் கொள்கிறேன் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

No comments:

Post a Comment