(எம்.மனோசித்ரா)
சமூகத்தில் மாற்றங்கள் ஏற்பட ஆரம்பித்து விட்டன. எனவே உள்ளுராட்சி மன்றத் தேர்தல் எமக்கு சவாலாக அமையாது. அரசாங்கமே அந்த சவாலை எதிர்கொண்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹிணி கவிரத்ன தெரிவித்தார்.
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தம்மை ஏமாற்றியுள்ளதாக இளைஞர் யுவதிகள் குறிப்பிடுகின்றனர். கடந்த தேர்தல்களில் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்தவர்கள் இம்முறை ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடுவதற்காக நேர்முகத் தேர்வுகளில் கலந்துகொண்டுள்ளனர்.
இளைஞர், யுவதிகளைப் போன்றே பெண்களுக்கும் ஐக்கிய மக்கள் சக்தியில் முன்னுரிமையளிக்கப்படும். ஏனைய துறைகளிலும் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கு அரசாங்கத்தின் ஒத்துழைப்பும் அவசியமாகும்.
தற்போது சமூகத்தில் மாற்றங்கள் ஏற்பட ஆரம்பித்து விட்டன. எனவே உள்ளுராட்சி மன்றத் தேர்தல் எமக்கு சவாலாக அமையாது. அரசாங்கமே அந்த சவாலை எதிர்கொண்டுள்ளது. நாட்டிலுள்ள பிரச்சினைகளுக்கு அரசாங்கத்துக்கு சிறந்த தீர்வுகளை வழங்க முடியாமல் போயுள்ளமையே இதற்கான காரணமாகும்.
நெல்லுக்கான நிர்ணய விலை தொடர்பில் அரசாங்கம் பெரியளவில் பேசினாலும், விவசாயிகள் அரசாங்கத்துக்கு நெல்லை வழங்கவில்லை. அரசாங்கத்தால் தாமும் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்பதை விவசாயிகள் குறிப்பிடுகின்றனர். அரசாங்கத்துக்கு விவசாயிகள் முதலாவது சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளனர். அடுத்து அரச உத்தியோகத்தர்கள் தயாராகின்றனர் என்றார்.
No comments:
Post a Comment