16 அம்ச திட்டங்களை நிறைவேற்றும் வகையில் வரவு செலவுத் திட்டத்தின் உள்ளடக்கம் காணப்பட வேண்டும் - செஹான் சேமசிங்க - News View

About Us

About Us

Breaking

Sunday, February 16, 2025

16 அம்ச திட்டங்களை நிறைவேற்றும் வகையில் வரவு செலவுத் திட்டத்தின் உள்ளடக்கம் காணப்பட வேண்டும் - செஹான் சேமசிங்க

(இராஜதுரை ஹஷான்)

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் அரசியல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் நிவாரண பாதீடாக அமையக்கூடாது. மாறாக பொருளாதார மேம்பாட்டுக்கான பாதீடாக அமைய வேண்டும். சர்வதேச நாணய நிதியத்தின் 16 அம்ச திட்டங்களை நிறைவேற்றும் வகையில் வரவு செலவுத் திட்டத்தின் உள்ளடக்கம் காணப்பட வேண்டும் என முன்னாள் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று திங்கட்கிழமை (17) பாராளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளார். வரவு செலவுத் திட்டத்தின் அம்சங்கள் குறித்து வினவியபோது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்கிறோம் என்று ஜனாதிபதியால் குறிப்பிட முடியாது. ஏனெனில் 6000 மில்லியன் அமெரிக்க டொலர்களுடன் வலுவான வெளிநாட்டு கையிருப்புடன்தான் அரசாங்கத்தை ஒப்படைத்தோம்.

பொருளாதார காரணிகள் எவற்றையும் கருத்திற் கொள்ளாமலே தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களில் மக்களுக்கு வாக்குறுதியளித்தது.

பொருளாதார மீட்சிக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான எமது அரசாங்கம் கடுமையான தீர்மானங்களை எடுத்தது. அந்த தீர்மானங்களால் மக்கள் பாதிக்கப்பட்டார்கள் என்பதை நாங்கள் நன்கு அறிவோம். இருப்பினும் வலி மிகுந்த தீர்மானங்களினால்தான் குறுகிய காலத்தில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள முடிந்தது. இதனை மக்கள் விளங்கிக் கொள்ளவில்லை. நிவாரண வாக்குறுதியளித்த தேசிய மக்கள் சக்தி மீது மக்கள் நம்பிக்கை கொண்டு அவர்களுக்கு ஆட்சியதிகாரத்தை வழங்கினார்கள்.

தேர்தல் மேடைகளில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு மக்கள் வலியுறுத்துகிறார்கள். வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக நிவாரணம் வழங்க வேண்டுமென மக்கள் குறிப்பிடுகிறார்கள். தேர்தல் மேடைகளில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் நிவாரணத்தை மாத்திரம் உள்ளடக்கியதாக வரவு செலவுத் திட்டம் அமையக்கூடாது.

பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களை உள்ளடக்கியதாக வரவு செலவுத் திட்டம் காணப்பட வேண்டும். அரச வருமானத்தை அதிகரித்துக் கொள்வதற்கான சிறந்த மூலோபாய திட்டங்கள் வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம் என்றார்.

No comments:

Post a Comment