நாட்டின் பிரதான பிரச்சினைகளை மறந்து USAID சர்ச்சையை பேசு பொருளாக்குவது பொறுத்தமற்றது : கடந்த காலங்களைப் போன்று பஸ்களில் ஆதரவாளர்களை அழைத்து வருவதால் வெற்றி பெற முடியாது - கலாநிதி ஹர்ஷ டி சில்வா - News View

About Us

About Us

Breaking

Sunday, February 16, 2025

நாட்டின் பிரதான பிரச்சினைகளை மறந்து USAID சர்ச்சையை பேசு பொருளாக்குவது பொறுத்தமற்றது : கடந்த காலங்களைப் போன்று பஸ்களில் ஆதரவாளர்களை அழைத்து வருவதால் வெற்றி பெற முடியாது - கலாநிதி ஹர்ஷ டி சில்வா

(எம்.மனோசித்ரா)

சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்திலிருந்து நிதியைப் பெற்று அதனை எவரேனும் மோசடி செய்திருப்பார்களாயின் அவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதனை விடுத்து நாட்டிலுள்ள பிரதான பிரச்சினைகளை மறந்து இதனை பேசு பொருளாக்குவது பொறுத்தமானதல்ல என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தின் ஊடாக 1977ஆம் ஆண்டிலிருந்து பல்வேறு ஒத்துழைப்புக்கள் கிடைத்துள்ளன.

கொவிட் காலத்திலிருந்து அமெரிக்காவிலிருந்து பைசர் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள முயற்சித்தபோது, முதன்மை பட்டியலில் இலங்கை உள்வாங்கப்பட்டிருக்கவில்லை. எனினும் அன்று எதிர்க்கட்சியிலிருந்தாலும் மறைந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர USAID நிறுவனத்தின் பிரதானி சமந்தா பவரிடம் விடுத்த கோரிக்கைக்கு அமையவே எமக்கு விரைவில் பைசர் தடுப்பூசி கிடைக்கப் பெற்றது.

அதன் பின்னர் கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் உரத் தட்டுப்பாடு ஏற்பட்டபோது, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கோரிக்கைக்கு அமையவே இந்நிறுவனமே உர நிவாரணத்தை வழங்கியது.

பாராளுமன்ற குழுக்களுக்கு கூட இந்நிதி உதவி கிடைக்கப் பெற்றுள்ளது. நான் தலைமைத்துவம் வகிக்கும் அரச நிதி பற்றிய பாராளுமன்றக் குழுவுக்கும் பாராளுமன்றத்தின் ஊடாக நிதி உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

அது மாத்திரமின்றி பாராளுமன்ற உறுப்பினர்கள் பலருக்கு சர்வதேச கற்கைகளுக்கான சந்தர்ப்பங்களும் வழங்கப்பட்டுள்ளன. அந்த அடிப்படையிலேயே பிரதமரின் பெயரும் குறிப்பிடப்படுகிறது.

இவ்வாறு பெயர் பட்டியலைப் பயன்படுத்துவது அவர்கள் மீது சேறு பூசுவதற்காகும். சட்டத்தரணிகள் சங்கத்துக்கும் பாரிய ஒத்துழைப்புக்கள் கிடைத்துள்ளன.

நீதிமன்ற கனணி மயமாக்கலுக்கு கூட இந்நிறுவனம் பாரிய ஒத்துழைப்புக்களை வழங்கியிருக்கிறது.

இந்நிறுவனத்திடமிருந்து கிடைக்கப் பெற்ற நிதி உதவிகளை எவரேனும் தவறாக உபயோகித்திருந்தால் அதற்கெதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனை விடுத்து நாட்டிலுள்ள பிரதான பிரச்சினைகளை மறந்து, இதனை பேசு பொருளாக்குவதற்கு முயற்சிப்பது பொறுத்தமற்றது.

ரணில் விக்கிரமசிங்கவுடன் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள முடியாததன் காரணமாகவே அவரைவிட்டு பிரிந்து சஜித் பிரேமதாசவுடன் பயணிக்கின்றோம்.

எமது நிலைப்பாடுகளுடன் இணங்குபவர்களை இணைத்துக் கொண்டு பயணிப்பதற்கு நாம் தயாராகவே இருக்கின்றோம். அதன் அடிப்படையிலேயே எம்மால் தேர்தலிலும் வெற்றி பெற முடியும்.

அதனை விடுத்து கடந்த காலங்களைப் போன்று பேரூந்துகளில் ஆதரவாளர்களை அழைத்து வருவதால் வெற்றி பெற முடியாது. அந்தக் காலம் கடந்து விட்டது. மக்களை ஒரு நிலைப்பாட்டின் கீழ் ஒரே இடத்துக்கு கொண்டுவர முடியுமெனில், கட்சி முக்கியமல்ல.

ஊழல்வாதிகளை அடையாளங் காண்பதற்கு இந்த அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் எந்தவொரு வேலைத்திட்டத்துக்கும் எமது முழுமையான ஒத்துழைப்பை வழங்வோம்.

அனைவரும் இணைந்து ஊழல் மோசடியை முற்றாக ஒழித்தால் நாட்டை அபிவிருத்தியை நோக்கிக் கொண்டு செல்வது இலகுவாகும்.

வரவு செலவு திட்டத்தை முன்வைத்ததன் பின்னர் அரசாங்கத்தின் எதிர்பார்ப்பை விளங்கிக் கொள்ளலாம். அவர்களது உத்தேசத்துக்கமைய பொருளாதார வளர்ச்சி வேகத்தை எட்ட முடியாது.

அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை வரவு செலவு திட்டத்தின் ஊடாக நிறைவேற்றும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகவுள்ளது என்றார்.    

No comments:

Post a Comment