ஆசிரியர் வெற்றிடங்கள் இந்த வருடத்திற்குள் நிரப்பப்படும் - பிரதமர் ஹரினி அமரசூரிய - News View

About Us

About Us

Breaking

Tuesday, February 18, 2025

ஆசிரியர் வெற்றிடங்கள் இந்த வருடத்திற்குள் நிரப்பப்படும் - பிரதமர் ஹரினி அமரசூரிய

நாடளாவிய ரீதியில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு இந்த வருடத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி உயர்கல்வி அமைச்சரான பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அத்துடன், ஆசிரியர் கலாசாலைகளில் இருந்து வெளியேறும் ஆசிரியர்களுக்கும் இந்த வருடத்திற்குள் நியமனங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

அந்த வகையில் இந்த வருடத்திற்குள் பெரும்பாலான ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப முடியும் என்றும் அவர் சபையில் நம்பிக்கை வெளியிட்டார்.

பாராளுமன்றத்தில் இன்று (18) வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில் சாமர சம்பத் தசநாயக்க எம்பி எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும்போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

சாமர சம்பத் தசநாயக்க எம்.பி தமது கேள்வியின்போது, “மாகாண சபை பாடசாலைகளிலிருந்து தேசிய பாடசாலைகளுக்கு ஆசிரியர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டு வந்தார்கள். எனினும் அதற்கான கால எல்லையை மீண்டும் நீடிக்காமல் இருப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்பதை கல்வி அமைச்சர் அறிவாரா?” என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த பிரதமர், “தேசிய பாடசாலைகளிலிருந்து மேலதிகமாக காணப்படும் ஆசிரியர்களை மாகாண பாடசாலைகளுக்கும் மாகாண பாடசாலைகளில் மேலதிகமாக காணப்படும் ஆசிரியர்களை தேசிய பாடசாலைகளுக்கு நியமிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

எனினும் நீதிமன்றத்தில் அது தொடர்பான வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அது நிறுத்தப்பட்டிருந்தது.

எனினும், பின்னர் கிடைத்த நீதிமன்ற தீர்ப்பையடுத்து மீண்டும் அதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.

அந்த வகையில் இந்த வருட இறுதிக்குள் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் அவர் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment