கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (19) காலை இடம்பெற்றுள்ள துப்பாக்கிச்சூட்டு சம்பவமொன்றில் பாரிய திட்டமிட்ட குற்றச் செயல்கள் கும்பலின் தலைவர் கனேமுள்ள சஞ்சீவ என்று அழைக்கப்படும் சஞ்சீவ குமார சமர ரத்ன உயிரிழந்துள்ளார்.
கொழும்பு புதுக்கடை நீதிமன்றக் கட்டடத் தொகுதியில் இலக்கம் 5 நீதவான் நீதிமன்றத்தில் குற்றவாளிக் கூண்டில் அவர் சாட்சியமளித்துக் கொண்டிருந்தபோதே இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சட்டத்தரணி போன்று உடையணிந்து வந்திருந்த ஒரு நபர் அந்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச்சூட்டுக்காக பயன்படுத்தப்பட்ட ரிவோல்வர் ரகத்துப்பாக்கி நீதிமன்ற வளாகத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ள அவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காலி பூஸா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர் வழக்கு ஒன்றில் ஆஜராவதற்காக இன்று புதுக்கடை நீதிமன்றத்திற்கு கொண்டுவரப்பட்டிருந்தார். அதன் போது சாட்சியமளிப்பதற்காக அவர் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டிருந்த போதே இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.
சம்பவத்தையடுத்து புதுக்கடை நீதிமன்ற கட்டடத் தொகுதி வளாகம் பலத்த பாதுகாப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் கடும் சோதனை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
லோரன்ஸ் செல்வநாயகம்
No comments:
Post a Comment