(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
விசாரணைகளை நிறைவு செய்யாமல் சட்டமா அதிபரை குற்றவாளிக் கூண்டில் ஏற்ற வேண்டாம். சட்டத்தை அறியாமல் தமக்கு ஏற்றாற்போல் செயற்பட்டால் இவ்வாறான நிலையே ஏற்படும். அரசாங்கத்துக்கு ஏதேனும் நெருக்கடி ஏற்படும்போது கடந்த அரசாங்கத்தின் அறிக்கை பட்டியல் வெளியிடப்படுகிறது. நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (7) நடைபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத் திட்டத்தை நீக்குதல் குறித்த தனியார் உறுப்பினர் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது, ரவி செனவிரத்ன, ஷானி அபேசேகர ஆகியோர் தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் மேடைகளில் ஏறியவர்கள். ஒருவர் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், பிறிதொருவர் குற்றப் புலனாய்வு பிரிவின் பிரதானி.
சட்டமா அதிபரின் பரிந்துரைகளை புறக்கணித்து இவ்விருவராலும் விசாரணைகளை மேற்கொள்ள முடியும். லசந்தவின் படுகொலை பற்றி நாங்கள் ஆரம்பத்தில் இருந்து பேசுகிறோம். நியாயத்துக்காக குரல் கொடுத்தோம். ஆகவே கேள்வி கேட்கும் உரிமை எமக்கு உண்டு.
சட்டமா அதிபரை அழைத்து வழக்குத் தாக்கல் செய்யுமாறு அவருக்கு அழுத்தம் பிரயோகித்தால் அவர், 'விசாரணைகளை நிறைவு செய்து அறிக்கை சமர்ப்பியுங்கள் வழக்குத் தாக்கல் செய்கிறேன் என்றே குறிப்பிடுவார்.'
விசாரணைகளை நிறைவு செய்யாமல் சட்டமா அதிபரை குற்றவாளி கூண்டில் ஏற்ற வேண்டாம். சட்டத்தை அறியாமல் தமக்கு ஏற்றாட்போல் செயற்பட்டால் இவ்வாறான நிலையே ஏற்படும். அரசாங்கத்துக்கு ஏதேனும் நெருக்கடி ஏற்படும் போது கடந்த அரசாங்கத்தின் அறிக்கை வெளியிடப்படுகிறது.
அரசாங்கத்துக்கு நெருக்கடி ஏற்பட்டபோது ஜனாதிபதி நிதியம் தொடர்பான பட்டியல் வெளியானது, இரண்டாவது பட்டியல் வெளியிடப்பட்டது, நேற்று பிறிதொரு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்றார்.
No comments:
Post a Comment