மலையக மக்களின் பிரதிநிதிகள் என்று கூறியவர்கள் செய்யாத பலவற்றை நாங்கள் செய்யவுள்ளோம் - அம்பிகா சாமுவேல் - News View

About Us

About Us

Breaking

Friday, February 7, 2025

மலையக மக்களின் பிரதிநிதிகள் என்று கூறியவர்கள் செய்யாத பலவற்றை நாங்கள் செய்யவுள்ளோம் - அம்பிகா சாமுவேல்

(எம்.ஆர்.எம். வசீம், இராஜதுரை ஹஷான்)

மலையக மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் அம்பிகா சாமுவேல் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (7) இடம்பெற்ற தோட்டங்கள் சார்ந்து காணப்படுகின்ற வீதிகளை அரசாங்கத்திற்கு சுவீகரிக்க வேண்டுமென வலியுறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர் ஹேஷா விதானகேவினால் முன்வைக்கப்பட்ட தனிநபர் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில், சாதாரண ஒரு பிரஜைக்கு கிடைக்க வேண்டிய அடிப்படை வசதிகள் புறக்கணிக்கப்பட்டவர்களாகவே மலையக மக்கள் உள்ளனர். நீர், சுகாதாரம், வீதி, வசிப்பிடம் என்பன கேள்விக்குறியாகவே உள்ளன.

இதனாலேயே இந்த விடயங்கள் தொடர்பில் தேசிய மக்கள் சக்தி எமது தேர்தல் மேடைகளில் இதனை சுட்டிக்காட்டி பேசி வந்தோம். கடந்த கால ஆட்சியாளர்கள் மலையக மக்களுக்கு ஒன்றேனும் செய்யவில்லை. பாரபட்சம் காட்டினர் என்பதனை அந்த கட்சிகளை சர்ந்தவர்களே கூறுகின்றனர்.

எவ்வாறாயினும் தேசிய மக்கள் சக்தியாகிய நாங்கள் மலையக மக்களின் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தேசிய நீரோட்டத்தில் அவர்களை ஒன்றிணைத்து நாங்களும் இலங்கையர்கள் என்ற எண்ணக்கருவை உருவாக்குவோம். அந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

மலையக மக்களின் பிரதிநிதிகள் என்று கூறியவர்கள் செய்யாத பலவற்றை நாங்கள் செய்யவுள்ளோம். நாங்கள் உரித்துடன் சகல வசதிகளையும் கொண்ட 5400 வீடுகளை நிர்மாணித்து வழங்கவுள்ளோம். மீரியாபெத்த, கபரகல மக்களுக்கு உரித்துடன் வீடுகளை நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இதேவேளை கிளீன் ஶ்ரீலங்கா திட்டத்திலும் மலையக மக்களை உள்வாங்கி அவர்களின் லயன் அறைகள், வீதிகள் ஆகியவற்றை புனரமைக்கவுள்ளோம். நாங்கள் கூறியதை செய்வொம். அதனால்தான் மக்கள் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியை ஆதரித்துள்ளது என்றார்.

No comments:

Post a Comment