ஹேஷா விதானகேயின் பிரேரணை முதலைக் கண்ணீர் வடிப்பதை போன்றது : மலையக ஜாம்பவான்கள் எனக்கூறும் தலைவர்களும் வகை சொல்ல வேண்டும் - கிட்ணன் செல்வராஜா - News View

About Us

About Us

Breaking

Friday, February 7, 2025

ஹேஷா விதானகேயின் பிரேரணை முதலைக் கண்ணீர் வடிப்பதை போன்றது : மலையக ஜாம்பவான்கள் எனக்கூறும் தலைவர்களும் வகை சொல்ல வேண்டும் - கிட்ணன் செல்வராஜா

(எம்.ஆர்.எம். வசீம், இராஜதுரை ஹஷான்)

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தில் இருக்கும் நாங்கள் மலையகத்தில் இருக்கின்ற கல்வி, வீடமைப்பு மற்றும் வீதி போக்குவரத்து பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்போம் என தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் கிட்ணன் செல்வராஜா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (07) இடம்பெற்ற தோட்டங்கள் சார்ந்து காணப்படுகின்ற வீதிகளை அரசாங்கத்திற்கு சுவீகரிக்க வேண்டுமென வலியுறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர் ஹேஷா விதானகேவினால் முன்வைக்கப்பட்ட தனி நபர் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்த ஹேஷா விதானகே முன்வைத்த பிரேரணையை நாங்கள் ஆதரிக்கின்றோம். ஆனால் அவருடைய பிரேரணையானது முதலைக் கண்ணீர் வடிக்கும் பிரேரணை போன்றது.

1992ஆம் ஆண்டில் இலங்கையில் உள்ள 449 பெருந்தோட்டங்களை தனியார் முதலாளிகளுக்கு ஐக்கிய தேசியக் கட்சியே அடகு வைத்தது. அதன்போது எந்தவொரு வேலைத்திட்டங்களையும் முன்வைக்காத அமைப்பைச் சேர்ந்த ஒருவரே இன்று இந்த பிரேரணையை முன்வைத்திருக்கிறார்.

மலையகத்திலுள்ள தோட்டங்களை வகைப்படுத்தினாலும் அங்குள்ள வீதிகள் வகைப்படுத்தப்படவில்லை. தேசிய நெடுஞ்சாலைகள் ஏ, பி மற்றும் ஈ வகுப்பு சாலைகள் உள்ளன.

இவ்வாறாக 12,567 கிலோ மீற்றர் தூர வீதிகள் உள்ளன. தோட்டங்களிலும் அவ்வாறான வீதிகள் உள்ளன. அவை வீதிகளாக அன்றி குன்றும் குழியுமாக காணப்படுகின்றன. இவ்வாறான நிலையிலேயே இந்த பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது.

76 வருடங்களாக நாட்டை ஆண்ட பிற்போக்குவாத ஆட்சியாளர்கள் மாத்திரமல்ல, ஆட்சியாளர்களுக்கு தூணாகவும், துணையாகவும், வாளாகவும் இருந்த மலையகத்து ஜாம்பவான்கள் என கூறிக்கொள்கின்ற தமிழ் தலைவர்களும் இதற்கு வகை சொல்ல வேண்டும்.

எனவே ஜனாதிபதி தோழர் அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தில் இருக்கும் நாங்கள் மலையகத்தில் இருக்கின்ற கல்வி, வீடமைப்பு மற்றும் வீதி போக்குவரத்து பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்து, மலையகத்தை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுப்போம் என்றார்.

No comments:

Post a Comment