கால்வாயில் வீழ்ந்து மீட்கப்பட்ட யானை இரு உயிர்களை காவு கொண்டது - News View

About Us

About Us

Breaking

Thursday, February 20, 2025

கால்வாயில் வீழ்ந்து மீட்கப்பட்ட யானை இரு உயிர்களை காவு கொண்டது

இன்று (20) அதிகாலை பொலன்னறுவை, மாதுருஓயா, இசட் டி (ZD) பிரதான கால்வாயில் தவறி வீழ்ந்த நிலையில் மீட்கப்பட்ட காட்டு யானை திம்புலாகல வெஹெரகம கிராமத்திற்குள் புகுந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவரை தாக்கி இருவரையும் கொன்றுள்ளதாக அரலகங்வில பொலிசார் தெரிவித்தனர்.

டி.ஆர். பொடி ராலஹாமி (74) மற்றும் அவரது சகோதரி டி.ஆர். பிரேமாவதி மெனிகே (80) ஆகிய இருவருமே இச்சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் அரலகங்வில பொலிசார் தெரிவித்தனர்.

டி.ஆர். பிரேமாவதி மெனிகே அவரது வீட்டு முற்றத்தில் உயிரிழந்துள்ளதாகவும், டி.ஆர். பொடி ராலாஹமி பொலன்னறுவை பிரதான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
மாதுருஓயா ZD பிரதான கால்வாயில் வீழ்ந்த காட்டு யானையை வெஹெரகல வனவிலங்கு அதிகாரிகள், சுமார் 3 மணி நேர போராட்டத்தின் பின்னர் மீட்டுள்ளனர். 

குறித்த யானை 35 வயது மதிக்கத்தக்கது என வனஜீவராசி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து குறித்த யானை வெஹெரகல கிராமத்திற்குள் சென்று, அங்கு கால்வாயில் நின்றிருந்த டி.ஆர். பொடி ராலஹாமியை தாக்கி விட்டு வீட்டு முற்றத்தில் நின்றிருந்த அவரது சகோதரியான டி.ஆர். பிரேமாவதி மெனிகேவையும் தாக்கியுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

படங்கள் : சிறிபுர மதுஷானி அபேசிங்க

No comments:

Post a Comment