(எம்.ஆர.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
சிறந்த அரச நிர்வாகத்தை அரசாங்கத்தால் மாத்திரம் தனித்து முன்னெடுக்க முடியாது. அரச நிறுவனங்கள் முழுமையாக ஒத்துழைப்பு வழங்க வேண்டும். நாட்டு மக்கள் இன்று அனைத்தையும் கேள்வி கேட்கிறார்கள். 225 பாராளுமன்ற உறுப்பினர்களைப் போன்று, அரச உத்தியோகத்தர்களும் அதிகாரிகளும் மக்களுக்கு பொறுப்புக்கூற வேண்டிய வகையில் செயற்பட வேண்டும். இது மிகவும் முக்கியமானது என சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (27) நடைபெற்ற 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஜனாதிபதி செலவினத் தலைப்பு மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது, ஒரு சில அரச நிறுவனங்கள் பொறுப்புடன் செயற்படுவதில்லை. ஒரு சில நிறுவனங்கள் தமது பொறுப்பு என்னவென்று தெரியாமலே செயற்படுகின்றன. நிதி மோசடி காரணமாகவே நாடு வங்குரோத்து நிலையடைந்தது.
இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு முறையாக செயற்பட்டுள்ளதா என்பதை ஆராய வேண்டும். சிறு அளவிலான மோசடிகள் தொடர்பில் கவனம் செலுத்திய இலஞ்ச ஊழல் ஆணைக்குழு பெருமளவிலான மோசடிகளை கவனத்திற் கொள்ளவில்லை. இதுவும் வங்குரோத்து நிலைக்கு ஒரு காரணமாகும்.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழு பொறுப்புடன் செயற்பட வேண்டும். பாரிய போராட்டத்தின் பின்னர்தான் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு சுயாதீனமாக்கப்பட்டது. ஆகவே ஆணைக்குழு பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்துகிறோம். ஒரு சில நிறுவனங்களின் செயற்பாடுகள் மற்றும் நிதி செயலாற்றுகை முழுமையாக ஆய்வு செய்யப்பட வேண்டும்.
சிறந்த அரச நிர்வாகத்தை அரசாங்கத்தால் மாத்திரம் தனித்து முன்னெடுக்க முடியாது. அரச நிறுவனங்கள் முழுமையாக ஒத்துழைப்பு வழங்க வேண்டும். நாட்டு மக்கள் இன்று அனைத்தையும் கேள்வி கேட்கிறார்கள்.
ஆகவே, 225 பாராளுமன்ற உறுப்பினர்களைப்போன்று, அரச உத்தியோகத்தர்களும் அதிகாரிகளும் மக்களுக்கு பொறுப்புக்கூற வேண்டிய வகையில் செயற்பட வேண்டும். இது மிகவும் முக்கியமானது.
அரசியல்வாதிகளை மக்கள் விமர்சிக்கிறார்கள். ஐந்தாண்டு பதவிக் காலம் முடிவடைந்ததன் பின்னர் அரசியல்வாதிகள் மக்கள் மத்தியில் செல்வார்கள். ஆனால், அரச அதிகாரிகள் அவ்வாறில்லை. பதவியில் இருந்து ஓய்வு பெறும் வரை மக்கள் மத்தியில் அரச அதிகாரிகள் செல்வதில்லை.
ஆகவே, அரச அதிகாரிகள் பொறுப்புடன் செயற்பட வேண்டும். அதற்கான சூழலை ஏற்படுத்திக் கொடுப்போம். தேவையான மானியங்களை வழங்குவோம் என்றார்.
No comments:
Post a Comment