மக்கள் விடுதலை முன்னணி அரச படைகளிடமிருந்து கைப்பற்றிய 2136 ஆயுதங்களை இன்றுவரை ஒப்படைக்கவில்லை : தாக்குதல் நடத்தியவர்கள் இன்று கண்காட்சியை பார்வையிட அழைப்பு விடுக்கிறார்கள் இதுவே கர்மவினை - பாராளுமன்றத்தில் கேள்வியெழுப்பினார் தயாசிறி ஜயசேகர - News View

About Us

About Us

Breaking

Friday, February 28, 2025

மக்கள் விடுதலை முன்னணி அரச படைகளிடமிருந்து கைப்பற்றிய 2136 ஆயுதங்களை இன்றுவரை ஒப்படைக்கவில்லை : தாக்குதல் நடத்தியவர்கள் இன்று கண்காட்சியை பார்வையிட அழைப்பு விடுக்கிறார்கள் இதுவே கர்மவினை - பாராளுமன்றத்தில் கேள்வியெழுப்பினார் தயாசிறி ஜயசேகர

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

மக்கள் விடுதலை முன்னணி 1987 - 1989 ஆண்டு காலப்பகுதியில் அரச படைகளிடம் இருந்து கைப்பற்றிய 2136 ஆயுதங்களை இன்றுவரை பாதுகாப்பு அமைச்சிடம் ஒப்படைக்கவில்லை. இந்த ஆயுதங்கள் எங்கே என்பதை குறிப்பிட வேண்டும். ஆயுதங்களை மீள அரசிடம் கையளிக்க வேண்டும். அதேபோல் விடுதலைப் புலிகள் பயன்படுத்திய ஆயுதங்கள் முறையாக பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதா என்பதை ஆராய வேண்டும். ஏனெனில், இலங்கை தற்போது பாதாள குழுக்களின் நாடாக மாறி வருகிறது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஜனாதிபதி செலவினத் தலைப்பு மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது, தலதா மாளிகையின் புனித சின்னங்களை மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மகாநாயக்க தேரர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இதற்கமைவாக எதிர்வரும் மாதம் அச்சின்னங்கள் காட்சிப்படுத்தப்பட்டவுள்ளன.

1989.02.08 ஆம் திகதி தலதா மாளிகை மீது தாக்குதல் நடத்தப்பட்டது. தலதா மாளிகைக்கும், அதனையண்மித்த பகுதிகளுக்கும் தாக்குதல் நடத்தியவர்கள் இன்று கண்காட்சியை பார்வையிட அழைப்பு விடுக்கிறார்கள். இதனையே கர்மவினை என்று குறிப்பிட வேண்டும்.

நாட்டின் தேசிய பாதுகாப்பு தற்போது பிரதான பேசு பொருளாக காணப்படுகிறது. தேசிய பாதுகாப்பு தொடர்பில் விக்கிபீடியா மற்றும் கூகுள் ஆகியவற்றில் விடயங்களை ஆராய்ந்து அவற்றை தொகுத்து சபைக்கு வந்து ஒருசிலர் விசேட கூற்றை முன்வைக்கிறார்கள். நாட்டின் உள்ளக பாதுகாப்பை முதலில் உறுதிப்படுத்துவது தேசிய பாதுகாப்பின் அடிப்படை அம்சமாகும் என்பதை அரசாங்கம் முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும்.

புதுக்கடை நீதிமன்றத்தின் 09 ஆம் இலக்க அறைக்கு கொண்டுவரவிருந்த நபரை நுகர்வோர் பாதுகாப்பு தொடர்பான வழக்கினை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் 5 ஆம் இலக்க அறைக்கு கொண்டுவந்தது எவ்வாறு? குறித்த சந்தேகநபரை 5 ஆம் இலக்க அறைக்கு கொண்டுவந்தபோது அங்கிருந்த நீதவான்' ஏன் இவரை இங்கு கொண்டுவந்தீர்கள்' என்று பாதுகாப்பு தரப்பினரிடம் வினவியுள்ளார்.

புதுக்கடை நீதிமன்றத்துக்குள் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் நீதிமன்றத்தின் உள்ளக தரப்பினர் தொடர்புகொண்டிருக்கலாம் என்பதை அன்று குறிப்பிட்டேன். சிறைச்சாலை மற்றும் பொலிஸார் அனைவரும் ஒன்றிணைந்தே குறித்த கைதியை நீதிமன்றத்துக்கு கொண்டுவந்துள்ளார்கள்.

புலனாய்வு அதிகாரிகள் தகவல் சேகரிப்பதற்காக பொதுமக்களுடன் மக்களாக இருப்பார்கள். தற்போது பாதாள குழுக்கள் பொலிஸ் தரப்புக்குள் புகுந்துள்ளது. இதுவே பாரதூரமான பிரச்சினை. பாதுகாப்பு வலயத்துக்குள் இந்நிலைமையே காணப்படுகிறது.

புதுக்கடை நீதிமன்றத்துக்குள் நீதிபதியின் முன்னிலையில் துப்பாக்கிச் சூட்டு பிரயோகிக்கப்பட்டபோது நீதிபதி அச்சமடைந்து ஒளிந்துள்ளார். இது கவலைக்குரியது. இதுவே இன்றையநிலை இவற்றை பற்றி பேசும் போதுதான் எமது வாய் மூடப்படுகிறது.

இந்த நாட்டில் 30 வருட கால யுத்தம் நிலவியது. விடுதலை புலிகள் அமைப்புடன், புளொட், ஈரோஸ், டெலோ என பல குழுக்கள் செயற்பட்டன. இவர்களின் மத்தியில் பெருமளவான ஆயுதங்கள் பயன்பாட்டில் இருந்தன.

யுத்தத்துக்கு பின்னர் இந்த ஆயுதங்கள் முறையாக பொறுப்பேற்கப்பட்டதா? 1987 மற்றும் 1989 ஆம் ஆண்டு கலவரத்தின் பின்னர் 1990 ஆம் ஆண்டளவில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்புகளுக்கமைய மக்கள் விடுதலை முன்னணி பாதுகாப்பு தரப்பிடமிருந்து பல ஆயுதங்களை கைப்பற்றியுள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் தரவுகளுக்கமைய 1990 ஆம் ஆண்டுக்கு பின்னரான காலப்பகுதியில் மக்கள் விடுதலை முன்னணி கைப்பற்றிய துப்பாக்கி உட்பட 2136 ஆயுதங்கள் பாதுகாப்பு தரப்பிடம் மீண்டும் ஒப்படைக்கப்படவில்லை. அத்துடன் அரசாங்கங்களை அச்சுறுத்துவதற்காக மக்கள் விடுதலை முன்னணி பல குழுக்களாக செயற்பட்டது.

மக்கள் விடுதலை முன்னணி பாதுகாப்பு அமைச்சுக்கு கையளிக்காத ஆயுதங்களையா பாதாளக் குழுக்கள் தற்போது பயன்படுத்துகின்றனர்?

பாதாளக் குழுக்களை இல்லாதொழியுங்கள். அது எமக்கு பிரச்சினையில்லை. ஆனால் தற்போது தேசிய பாதுகாப்பு பலவீனப்படுத்தப்பட்டுள்ளது. பாதாள குழுக்களின் நாடாக இலங்கை தற்போது மாறி வருகிறது. ஆகவே 2136 ஆயுதங்களை மக்கள் விடுதலை முன்னணி தமது அரசாங்கத்துக்கு தற்போது கையளிக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment