வத்தளை பகுதியில் லொறியொன்றை கடத்திச் சென்ற நிலையில் கடுவெல பகுதியில் அதன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி தப்பிச் சென்ற சந்தேகநபரை கைது செய்துள்ளதாக கடுவெல பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் இருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
நுரைச்சோலையில் இருந்து ஒரு பல்பொருள் அங்காடிக்கு மரக்கறிகளை ஏற்றிச் சென்ற லொறியொன்று, வத்தளை பகுதியில் உள்ள ஒரு தேநீர் கடைக்கு அருகில் சாரதி தேநீர் அருந்துவதற்காக நிறுத்தப்பட்டிருந்தது.
இதன்பொது கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் குறித்த லொறியைக் கடத்திச் சென்றுள்ளார்.
பின்னர் சாரதி லொறியை முச்சக்கர வண்டியில் துரத்தியபோதிலும் அதைப் பிடிக்க முடியவில்லை. அதற்கமைய பொலிசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதுடன், லொறியின் GPS கட்டமைப்பு குறித்தும் பொலிசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, வெல்லம்பிட்டி பகுதியில் குறித்த லொறியை பொலிஸார் நிறுத்த முயன்ற போதிலும், அது பலனளிக்கவில்லை.
பின்னர், அது கடுவெலவை நெருங்கியபோது, பொலிஸார் பல குழுக்களாக லொறியை பின் தொடர்ந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, தலஹேன பகுதியிலும் கடுவெல பகுதியில் பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
ஆயினும் லொறி நிறுத்தாமல் இரண்டு கார்கள் மற்றும் ஒரு பஸ், ஒரு முச்சக்கர வண்டி ஆகியவற்றை மோதித் தள்ளியவாறு தொடர்ச்சியாக சென்றுள்ளது.
இவ்வாறு செல்லும்போது இசுருபாயாவில் உள்ள கல்வி அமைச்சின் பின்னால் உள்ள நுழைவாயில் கதவையும் சேதமாக்கியுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
பின்னர், கடுவெல நகரில் லொறி செல்லும் பாதைக்கு குறுக்கே மற்றுமொரு லொறி நிறுத்தப்பட்டுள்ளது.
வீதித் தடைகள் அமைக்கப்பட்டதை அவதானித்த சாரதி லொறியை திருப்பி வந்த வழியில் செல்லத் தயாராகியுள்ளார்.
இவ்வேளையில் பொலிசார் லொறியை நோக்கி மேலும் பல முறை துப்பாக்கிச் சூடு நடத்தி அதை நிறுத்த நடவடிக்கை எடுத்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து கடுவெல நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் லொறியை நிறுத்திய சந்தேகநபர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் செல்ல முயன்றபோது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் களனி பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடையவர் என தெரிய வந்துள்ளது.
சந்தேகநபர் கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment