விவசாயிகள் நன்மையே அடைந்துள்ளனர் - அமைச்சர் கே.டி. லால்காந்த - News View

About Us

About Us

Breaking

Sunday, February 16, 2025

விவசாயிகள் நன்மையே அடைந்துள்ளனர் - அமைச்சர் கே.டி. லால்காந்த

நெல்லுக்கான உத்தரவாத விலை காரணமாக விவசாயிகள் நன்மையே அடைந்துள்ளனர் என விவசாய காணி, நீர்ப்பாசன அமைச்சர் கே.டி லால்காந்த தெரிவித்தார்.

கண்டியில் நேற்று சனிக்கிழமை (15) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின் ஊடகங்களுக்கு அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, நெல்லுக்கான உத்தரவாத விலை நிர்ணயிக்கப்பட்டமை தொடர்பாக பல விமர்சனங்கள் தெரிவிக்கிப்படுகின்றன. அவை அனைத்தும் எதிரணியின் பிரச்சாரமே தவிர அதில் உண்மையில்லை.

ஏனெனில் தற்போது அரசு நிர்ணயித்துள்ள விலையை விட அதிக விலை கொடுத்து தனியார் துறையினர் கொள்வனவு செய்வது விவசாயின் பக்கம் சரியானது. அவர்களுக்கு அதிக விலை கிடைக்கிறது. எனவே விவசாயிகள் சார்பாக எந்தப்பாதிப்பும் இல்லை. அவர்களுக்கு நன்மையே கிடைத்துள்ளது.

ஆனால் எதிர்காலத்தில் இதனால் பாவனையாளர்கள் அல்லது நுகர்வோர் பாதிப்படையாது நாம் பார்த்துக் கொள்வோம்.

தற்போதுதான் படிப்படியாக அறுவடை ஆரம்பித்துள்ளது. அடுத்த மாதம் அளவில்தான் முறையான அறுவடை ஆரம்பிக்கும். காலத்திற்கு முன் பயிர்ச் செய்கை செய்த சில விவசாயிகளே தற்போது அறுவடை செய்கின்றனர். இது மிகவும் குறைந்த அளவாகும்.

அடுத்த மாதமளவில் ஏனைய பகுதிகளில் அறுவடைகள் மேற்கொள்ளும்போது அரச நெற் களஞ்சியங்களுக்கு நெல் கிடைக்க வாய்ப்பு உண்டு.

நெற் கொள்வனவிற்கு போதியளவு பணம் ஒதுக்கப்பட்டுள்ளது. விலையும் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. இன்னும் சில வாரங்களில் அறுவடை ஆரம்பிக்கும். அரச நெற் களஞ்சியங்கள் தயார் நிலையில் உள்ளன.

குரங்குகள் மற்றும் வன விலங்குகளால் பயிர்களுக்கு சேதம் ஏற்படுகிறது. குரங்குகளைப் பிடித்து திட்டமிட்டபடி அப்புறப்படுத்த சில பிரச்சினைகள் உள்ளன. இது ஒரு சிக்கலான பிரச்சினையாகும்.

முதலில் குரங்குகளை பிடிக்க வேண்டும். அவற்றுக்கு சத்திர சிகிட்சை செய்ய வேண்டும். கூடுகள் அமைக்கப்பட வேண்டும். அவற்றை கொண்டுபோய்ச் சேர்க்க இடம் தேட வேண்டும். இப்படி பல்வேறு பட்ட பிரச்சினைகள் உள்ளன. இவை எல்லாவற்றிற்கும் நிதி ஒதுக்கப்பட வேண்டும். ஆளணிகள் அமைக்கப்பட வேண்டும். எனவே அவை ஓரிரு இரவுகளில் தீர்க்க முடியாது. சிறிது காலம் எடுக்கும். எனவே பிரச்சினை ஒன்றும் கிடையாது.

காய்கறி விலையேற்றம் பற்றி ஊடகவியலாளர் ஒருவரால் கேட்கப்பட்டபோது அதற்கு பதில் அளித்த அமைச்சர் குறிப்பிட்டதாவது,

எப்போதும் ஒரு பருவத்தில் விலையேற்றம் உண்டு. அதாவது சில காலத்திற்கு சில பொருட்களின் விலை அதிகரிப்பதுண்டு.

இப்போது பொதுவாக காய்கறிகளின் விலை அதிகரித்துக் காணபட்டாலும் தக்காளி போன்றவற்றின் விலை உயரவில்லை.

பொதுவாக அதிகரிப்பதாயின் தக்காளி விலையும் அதிகரிக்க வேண்டும். அப்படி இல்லையே. தக்காளி உற்பத்தி அதிகரித்துள்ளது.

எனவே விலை குறைந்துள்ளது. ஏனையவற்றின் விலை ஏற்றம் காணப்பட உற்பத்தி குறைவு அல்லது அதுபோன்ற காரணங்கள் இருக்கலாம்.

இதனை பருவ விலையேற்றம் என்போம். அதாவது ஒரு பருவத்தில் கூடும், மற்றொரு பருவத்தில் குறையும். அப்படியான ஒன்று இதுவாகும் என்றார்.

No comments:

Post a Comment