யாழ். பல்கலை துணைவேந்தர், கலைப்பீடாதிபதிக்கு எதிரான வழக்கு : மீளப் பெறப்பட்டது வகுப்புத் தடை - News View

About Us

About Us

Breaking

Sunday, February 16, 2025

யாழ். பல்கலை துணைவேந்தர், கலைப்பீடாதிபதிக்கு எதிரான வழக்கு : மீளப் பெறப்பட்டது வகுப்புத் தடை

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக 4ஆம் வருட சட்டத்துறை மாணவனுக்கு விதிக்கப்பட்ட வகுப்புத் தடை மீளப் பெறப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் மாணவனுக்கு அறிவித்துள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தினுள் நடைபெற்ற மூன்று வெவ்வேறு விடயங்களில் 09 மாணவர்களுக்கு வகுப்புத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.

குறித்த வகுப்புத் தடை குறித்து, மாணவர் ஒன்றியத்தின் செயலாளராக அண்மைக்காலம் வரை செயலாற்றிய சட்டபீட மாணவனான சி.சிவகஜனால் விமர்சனத்துக்கு உட்படுத்தப்பட்டது.

அதனையடுத்து, தன்மீது பாரதூரமான அவதூறை ஏற்படுத்தும் வகையில் ஊடகங்களுக்கு சிவகஜன் செவ்வி வழங்கினார் என கலைப்பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் துணைவேந்தரிடம் முறைப்பாடு செய்திருந்தார்.

பேராசிரியர் எஸ்.ரகுராம் கலைப்பீடாதிபதி பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்த மறுநாளே குறித்த முறைப்பாடு வழங்கப்பட்டது.

முறைப்பாட்டின் அடிப்படையில், கடந்த ஜனவரி மாதம் 27ஆம் திகதி பல்கலைக்கழகத் துணைவேந்தரால் சட்டத்துறை மாணவன் சிவகஜனுக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டது.

இந்த வகுப்புத் தடை யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கலைப்பீடாதி சி.ரகுராம் முன்வைத்த முறைப்பாட்டுக்கு அமைய விதிக்கப்பட்டுள்ளது என்று துணைவேந்தரால் மாணவனுக்கு வழங்கப்பட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வகுப்புத் தடையைச் சவாலுக்குட்படுத்தி யாழ். பல்கலை துணைவேந்தர் சிறிசற்குணராஜா, கலைப்பீடாதிபதி, மாணவர் ஒழுக்காற்று அதிகாரி ஆகியோருக்கு எதிராக கொழும்பு உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு சட்டத்துறை மாணவன் சிவகஜனால் தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையிலையே மாணவன் மீதான வகுப்புத் தடை நீக்கப்பட்டுள்ளதாக மாணவனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

வகுப்புத் தடை நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டாலும், சட்ட விதிமுறைகளை மீறி மாணவனுக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டமைக்கு எதிராகவும், இழப்பீடு கோரியும் வழக்கினை தொடர்ந்து முன்னெடுக்கவுள்ளதாக மாணவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். விசேட நிருபர்

No comments:

Post a Comment