ஓட்டமாவடி மஜ்மா நகர் மயான பூமிக்கு மாற்றுக் காணிகள் வழங்கப்படும் : தனிப்பட்ட ரீதியில் 34 இலட்சத்து 27,500 ரூபா நன்கொடையாக கிடைப்பு - பாராளுமன்றத்தில் அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, February 27, 2025

ஓட்டமாவடி மஜ்மா நகர் மயான பூமிக்கு மாற்றுக் காணிகள் வழங்கப்படும் : தனிப்பட்ட ரீதியில் 34 இலட்சத்து 27,500 ரூபா நன்கொடையாக கிடைப்பு - பாராளுமன்றத்தில் அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவிப்பு

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

ஓட்டமாவடி மஜ்மா நகர் மயான பூமியில் விவசாயம் மேற்கொண்டு வந்தவர்களுக்கு மாற்று காணி வழங்க நடவடிக்கை எடுப்போம் என பொது நிர்வாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (27) வாய் மூல விடைக்கான கேள்வி நேரத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

ரவூப் ஹக்கீம் தனது கேள்வியின்போது, கொவிட் தொற்றில் மரணித்தவர்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ள ஒட்டமாவடி மஜ்மா நகர் மிகவும் வறுமையான சுமார் 300 குடும்பங்கள் வாழும் பிரதேசமாகும். இந்த பூமியை கைப்பற்றியதன் மூலம் அங்கு விவசாயம் மேற்கொண்டுவந்த காணி உரித்து பெற்றவர்களும் அசாதாரண நிலைக்கு ஆளாக்கப்பட்டிருக்கின்றனர். அதனால் காணி உரித்துடைய சிலர் தங்களுக்கு இதற்கு மாற்று காணி வழங்குமாறு கோரிக்கை விடுத்திருக்கின்றனர். அதனால் அந்த பிரதேசத்துக்கு அண்மித்த பகுதியில் இருக்கும் அரச காணியில் இருந்து இவர்களுக்கு மாற்று காணி வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமா என கேட்கிறேன் என்றார்.

அதற்கு அமைச்சர் தொடர்ந்து பதிலளிக்கையில், ஒட்டமாவடி மஜ்மா நகர் மயான பூமி, அரசாங்கத்துக்குரிய பூமி பிரதேசமாகும். அதில்தான் சிலர் விவசாயம் மேற்கொண்டு வந்துள்ளனர். என்றாலும் அந்த மக்களுக்கு மாற்று காணி வழங்குவதற்கு எந்த பிரச்சினையும் இல்லை. அதேபோன்று அங்கு அமைக்கப்பட்டிருக்கும் யானை வேலியை மயானத்தை பூரணமாக சுற்றி அமைப்பதற்கு சுற்றாடல் அமைச்சுடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்க முடியும்.

மேலும் கொவிட்19 பெருந்தொற்றினால் பீடிக்கப்பட்டு உயிரிழந்தவர்களை நல்லடக்கம் செய்வதற்கு பொருத்தமான இடமாக அடையாளம் காணப்பட்ட மட்டக்களப்பு மஜ்மா நகர் மயானமானது அடுகாடுகள் சுடுகாடுகள் கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் கிழக்கு மாகாணம், கோரளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபைக்கு உரித்தானதாகும். இதன் பரப்பளவு 10 ஏக்கராகும்.

இந்த காணி அரசாங்கத்துக்கு உரித்தானதாகும். அதனை முறையாக அரசாங்கத்துக்கு சுவீகரித்துக் கொள்ள தேவையான நடடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளருக்கு பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது.

காணியை கைப்பற்றிக் கொள்ள எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டும். என்றாலும் மேற்படி காணி சுவீகரிப்புக்கான நட்டஈடு வழங்கப்படவில்லை.

மேலும் மயானத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக மத்திய அரசாங்கத்தினால் நிதி ஒதுக்கப்படவில்லை. என்றாலும் பிரதேச சபையினால் அதன் பராமரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் 5ஆம் திகதியில் இருந்து 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 5ஆம் திகதி வரை 3,634 கொவிட் சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன. அதற்காக தனிப்பட்ட ரீதியில் 34 இலட்சத்து 27,500 ரூபா நன்கொடையாக கிடைக்கப் பெற்றுள்ளன.

அதேபோன்று கொழும்பு ராஜகிரியவில் அமைந்துள்ள நிதா அரச சார்பற்ற அமைப்பினால் பாதுகாப்பு மதில் அமைப்பதற்கு உபகரணங்கள் வழங்கப்பட்டிருந்தனர். பேருவளை சைனாபோட்டைச் சேர்ந்த ஜவாஹிர் ஹாஜியாரின் சொந்தப்பணத்தில் மயான பூமிக்கு வந்து செல்பவர்கள் தங்கிவிட்டு செல்ல கட்டிடம் ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது.

மயான பூமியை சுற்றி யானை வேலி மற்றும் மின்சார விநியோகம் கொழும்பு அப்ஸால் மரிக்காரின் நிதி நன்கொடையால் அமைக்கப்பட்டிருக்கிறது. அதேபோன்று கண்டி முஸ்லிம் பள்ளிவாசல் சம்மேளனத்தினால் அங்கு அகழ்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஜே.சி.பி. இயந்திரம் ஒன்று கையளிக்கப்பட்டிருக்கின்றன என்றார்.

No comments:

Post a Comment