பழங்குடியின மக்களின் பிரச்சினைகளுக்கு அடுத்த மூன்று மாதங்களில் தீர்வு : தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் பணிப்புரை - News View

About Us

About Us

Breaking

Thursday, January 23, 2025

பழங்குடியின மக்களின் பிரச்சினைகளுக்கு அடுத்த மூன்று மாதங்களில் தீர்வு : தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் பணிப்புரை

பழங்குடியின மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்காக தயாரிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற சட்ட வரைவின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும், பழங்குடியின மக்களின் அடிப்படை உரிமைகள் தொடர்பான தற்போதைய சட்ட சிக்கல்களைத் தீர்ப்பதற்கும் சுற்றாடல் அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடல் நேற்று (22) பாராளுமன்ற வளாகத்தில் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டு வேடுவ இன மக்களின் வரலாற்றுப் பெறுமதியைப் பற்றி விளக்கிய பழங்குடியின தலைவர் ஊருவரிகே வன்னியளத்தா, அவர்கள் தற்போது எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

ஐக்கிய நாடுகள் சாசனத்தின்படி தயாரிக்கப்பட்ட பழங்குடியின உரிமைச் சட்டம் மற்றும் பழங்குடியினர் அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து விளக்கிய பழங்குடியின தலைவர், கடந்த அரசுகள் சில நடவடிக்கைகளை எடுத்தாலும், தமது பிரச்சனைகளுக்கு உரிய தீர்வு கிடைக்கவில்லை என சுட்டிக்காட்டினார்.
வேடுவ இன மக்கள் நாட்டின் வரலாற்றுச் சொத்து என்றும், அவர்களைப் பாதுகாப்பதும் அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதும் இன்றியமையாதது என்றும் கலாசார அமைச்சர் சுனில் செனவி தெரிவித்தார்.

பழங்குடியின மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்குத் தேவையான சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளை நிறைவேற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை சுற்றாடல் அமைச்சு துரிதமாக முன்னெடுக்கும் என சுற்றாடல் அமைச்சர் தம்மிக்க படபெந்தி தெரிவித்தார்.

அது தொடர்வில் நடைமுறையில் உள்ள சட்ட நிலைமைகள் மற்றும் அதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து சுற்றாடல் அமைச்சு மற்றும் வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் விளக்கினர்.
பழங்குடியினர் எமது நாட்டின் ஒரு அங்கம் எனவும், ஏனைய அனைவருக்கும் இருக்கும் உரிமைகள் பழங்குடியினருக்கும் இருக்க வேண்டும் எனவும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய இங்கு தெரிவித்தார்.

பழங்குடியின மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு நடைமுறையில் உள்ள சட்ட மற்றும் தொழில்நுட்ப சிக்கல்கள் குறித்து கவனம் செலுத்திய பிரதமர், அடுத்த மூன்று மாதங்களில் பழங்குடியினரின் உரிமைகளை வென்றெடுக்க தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளிடம் கூறினார்.

இந்த நிகழ்வில் சுற்றாடல் அமைச்சர் தம்மிக்க படபெந்தி, கலாசார அமைச்சர் ஹினிதும சுனில் செனவி, சுற்றாடல் பிரதி அமைச்சர் அன்டன் ஜயக்கொடி, பாராளுமன்ற உறுப்பினர் சுகத் பலகல்ல, வனஜீவராசிகள் பணிப்பாளர் நாயகம் சூரியபண்டார ஆகியோர் உட்பட சுற்றாடல் அமைச்சு மற்றும் மாற்றுக் கொள்கை மையத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் மற்றும் பழங்குடியின மக்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment