ரோஹிங்கியா அகதிகளை நாட்டிலிருந்து வெளியேற்றும் நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொள்ளாதென நாங்கள் நம்புகிறோம் - ரவூப் ஹக்கீம் - News View

About Us

About Us

Breaking

Thursday, January 23, 2025

ரோஹிங்கியா அகதிகளை நாட்டிலிருந்து வெளியேற்றும் நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொள்ளாதென நாங்கள் நம்புகிறோம் - ரவூப் ஹக்கீம்

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

சர்வதேச சட்டங்களில் இருக்கும் நல்ல எண்ணக்கருக்களை எடுத்துக்கொண்டு ரோஹிங்கியா அகதிகளை நாட்டில் இருந்து வெளியேற்றுவது மாற்றுத்திட்டம் அல்ல என்பதை அரசாங்கம் உணர்ந்து அவர்களை நாட்டில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொள்ளாது என நாங்கள் நம்புகிறோம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (23) இடம்பெற்ற நாட்டுக்கு வந்திருக்கும் ரோஹிங்கியா அகதிகளை மீண்டும் திருப்பி அனுப்புவதை அரசாங்கம் மீள் பரிசீலனை செய்யவேண்டும் என சபை ஒத்திவைப்பு வேலை பிரேரணையை முன்மொழிந்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், முல்லைத்தீவு கடல் பகுதியில் இருந்து மீட்கப்பட்ட ரோஹிங்கியா அகதிகளை மீண்டும் அவர்களின் நாட்டுக்கே அனுப்புவது மாற்று வழி அல்ல என்பதை உணர்ந்து, அரசாங்கம் அவர்களை வெளியேற்றும் நடவடிக்கையை மேற்கொள்ளாது என நம்புகிறோம்.

என்றாலும் இந்த அகதிகள் மனித வியாபாரத்துடன் சம்பந்தப்பட்ட ஒரு பகுதியினர் என்ற கருத்தை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்திருப்பதன் மூலம் மறைமுகமாக மக்களை தூண்டும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

அகதிகள் தொடர்பில் சர்வதேச சட்டங்களுக்கு அமைய, துன்புறுத்தல்கள் கொடுமைகளுக்கு ஆளாகின்ற மக்கள் கூட்டம் அல்லது ஒரு நபர் தான் வாழும் தேச எல்லைக்கு வெளிக்கு பயணித்திருந்தால், அவர்கள் அகதிகளாக பாதுகாப்பு கோரினால், சம்பிரதாய சர்வதேச சட்டத்தின் திட்டங்ளுக்கு அமைய எந்த நாடும் அவர்களை அகதிகளாக ஏற்றுக் கொள்ளும் நடைமுறை இருக்கிறது. அதனை ஏற்றுக்கொண்டு எமது நாடு செயற்படும் என நாங்கள் நம்புகிறோம்.

இதற்கு முன்னரும் இவ்வாறான சம்வங்கள் இடம்பெற்றபோது எமது வெளிவிவகார அமைச்சு சர்வதேச சட்டத்தின் எண்ணக்கருக்களை சுட்டிக்காட்டி பாதுகாப்பு அமைச்சு பரிந்துரைகளை வழங்கி இருக்கிறது. அந்த பரிந்துரைகளை தலைகீழாக மாற்றி, இந்தமுறை இந்த அகதிகள் தொடர்பில் தேவையற்ற விடயங்களை தெரிவித்து, சர்வதேச ரீதியில் எங்களுக்கு இருக்கும் நற்பெயருக்கு நாங்கள் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

நாங்கள் சர்வதேச அகதிகள் சமவாயத்தில் கைச்சாத்திடாவிட்டாலும் சம்பிரதாய சட்டத்துக்கு அமைய, இந்த அகதிகளை மனித நேயத்துடன் பார்த்து, அவர்களுக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

அகதிகள் விடயத்தில் முன்னாள் வெளிவிவகார அமைச்சு இந்த நிலைப்பாட்டையே கடைப்பிடித்து வந்தது. ஆனால் தற்போது அந்த நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டிருப்பது தொடர்பில் எமது கவனத்தை செலுத்தியிருக்கிறோம்.

எனவே இந்த ரோஹிங்கியா அகதிகள் தொடர்பில் அரசாங்கம் மனிதாபிமானத்துடன் செயற்பட வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம் என்றார்.

No comments:

Post a Comment