(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
பாடசாலை மாணவர்களுக்கான நலன்புரித் திட்டங்களை விரிவுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. 250 இற்கும் குறைவான மாணவர்கள் உள்ள பாடசாலைகளின் அனைத்து மாணவர்களுக்கும் இந்த ஆண்டு இலவச பாதணி வழங்கப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (23) நடைபெற்ற அமர்வில் வாய் மூல விடைக்கான வினாக்கள் வேளையின்போது ஆளும் தரப்பின் உறுப்பினர் ரவீந்திர பண்டார முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் பதிலளித்ததாவது, கல்வி மறுசீரமைப்புக்களுக்காக முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகள் மீளாய்வு செய்யப்பட்டுள்ளன. நவீன உலகுக்கு பொருத்தமான வகையில் கல்வி கொள்கைத்திட்டம் அமுல்படுத்தப்படும். பரீட்சை முறைமைக்கு பதிலாக மாணவர்களுக்கு இணக்கமானதாக அமையும் கல்வி முறைமையை நடைமுறைப்படுத்த வேண்டும்.
பாடசாலைகளில் காணப்படும் மனித மற்றும் பௌதீக வள பற்றாக்குறைக்கு கட்டம் கட்டமாக தீர்வு காண்பதற்கு கொள்கை ரீதியில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. பாடசாலைகளுக்கு சமமான வளங்களை பகிர்ந்தளித்தால் பாடசாலைகளுக்கு இடையில் போட்டித்தன்மை நிலவாது.
250 க்கும் குறைவான மாணவர்கள் உள்ள பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு இந்த ஆண்டு இலவச காலணி வழங்கப்படும். இதற்கமைய சுமார் 7 இலட்சம் மாணவர்களுக்கு இவ்வாறு காலணிகள் வழங்கப்படும்.
No comments:
Post a Comment