(எம்.மனோசித்ரா)
அநுர - ஹரிணி அரசாங்கத்தின் முதலாவது அரசியல் பழிவாங்கலாக முன்னாள் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் அவரது மனைவி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். பாரதூரமான குற்றங்களில் ஈடுபட்ட உண்மையான குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக அரசாங்கம் இவ்வாறு செயற்படுமானால் விரைவில் பாரிய எதிர்ப்பு நடவடிக்கைளில் ஈடுபடுவோம் என முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வியாழக்கிழமை (23) விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டு இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், அநுர - ஹரிணி அரசாங்கத்தின் முதலாவது அரசியல் பழிவாங்கலாக முன்னாள் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் அவரது மனைவி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
2014 இல் வெள்ள அனர்த்தத்துக்கான இழப்பீட்டுத் தொகை குறித்த விவகாரத்தின் அடிப்படையிலேயே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அர்ஜூன மகேந்திரனை கைது செய்து மத்திய வங்கி பிணைமுறி ஊழலுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதாகக் கூறியே இவர்கள் ஆட்சியைப் பொறுப்பேற்றனர்.
2022 ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்களுக்கு மனித உரிமை மீறல் குற்றச்சாட்டின் அடிப்படையில் நீதிமன்றத்தால் தண்டனை வழங்கப்பட்டது. எனினும் குற்றவியல் வழக்குத் தாக்கல் செய்து இது குறித்து முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்று நாம் எண்ணினோம். இலத்திரனியல் வீசா ஊழலில் 320 கோடி ரூபா இழக்கச் செய்த அரசியல்வாதிகள், அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்த்தோம்.
இலத்திரனியல் கடவுச்சீட்டு ஊடாக 10 மாதங்களுக்கும் அதிக காலம் மக்களுக்கு கடவுச்சீட்டைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலைமையை ஏற்படுத்தியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்த்திருந்தோம். ஆனால் இவ்வாறு மிக முக்கியத்துவம் வாய்ந்த எந்தவொரு குற்றச் செயல்கள் தொடர்பிலும் எவ்வித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை.
இவற்றை தவிர்த்து முன்னாள் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் அவரது மனைவி கைது செய்யப்பட்டுள்ளமை முற்றுமுழுதாக அரசியல் வாங்கலாகும்.
கடந்த காலங்களில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி மற்றும் அக்கட்சிகளுடன் இருந்த குழுக்கள் புதிதாக மறுசீரமைக்கப்பட்டு புதிய தலைமைத்துவத்துக்கு அநுர பிரியதர்ஷன யாப்பாவை தெரிவு செய்து, புதிய அரசியல் கூட்டணியை அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.
கடந்த 8ஆம் திகதி இடம்பெற்ற ஒன்று கூடலில் பெரும்பாலானோர் பொறுப்புள்ள எதிர்க்கட்சியினர் என்ற ரீதியில் ஒன்றிணைந்தனர். பலமான எதிர்க்கட்சியின் மீதுள்ள பயம், அரிசி, தேங்காய், மருந்து என்பவற்றை வழங்க முடியாத இயலாமை, அத்தியாவசிய சேவைகளுக்கான வரிகளை குறைக்க முடியாமை என்பவற்றால் இந்த பலவீனமான அரசாங்கம் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது. இவை தொடர்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
நாட்டை வங்குரோத்தடையச் செய்த உண்மையான குற்றவாளிகளுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அன்றி, இவ்வாறான அரசியல் பழிவாங்கல்களுக்காக இந்த அரசாங்கத்துக்கு மக்கள் ஆணையை வழங்கவில்லை.
எனவே அரசாங்கம் தொடர்ச்சியாக இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடும் பட்சத்தில் பாரிய எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவோம் என அரசாங்கத்துக்கு எச்சரிக்கின்றோம்.
குற்றப் புலனாய்வு பிரிவு அரசாங்கத்தின் கைப்பாவையாகியுள்ளது. முழு உலகும் இதனை பார்த்துக் கொண்டிருக்கிறது என்பதை பதில் பொலிஸ்மா அதிபருக்கு நினைவுபடுத்துகின்றோம் என்றார்.
No comments:
Post a Comment