முஸ்லிம் பெயர்தாங்கிய தீவிரவாத சிந்தனையுடைய சஹ்ரானும் அவனது கைக்கூலிகளிலும் மேற்கொண்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகமும் தலைகுனிந்து அவமானப்பட்டதோடு அப்பாவி முஸ்லிம் சமூகம் குற்றவாளிக்கூண்டில் ஏற்றப்பட்டு கேள்விக்குட்படுத்தப்பட்டது.
முஸ்லிம் சமூகம் இரண்டாம் தரப்பிரஜைகளாக கட்டமைக்கப்பட்ட திட்டமிட்ட இனவாத சதிகளினால் தள்ளப்பட்டது. நின்றால், நடந்தால், பார்த்தால் எல்லாமே சந்தேகக் கண்கொண்டே நோக்கப்பட்டது.
வேலைத்தளங்களில் பெரும்பான்மை சகோதரர்களின் பார்வையை எதிர்நோக்க தயங்கிய வேதனை நிறைந்த நாட்களவை காலப்போக்கில் இந்த எண்ணம் தளர்வுற்றாலும் முற்றாக இல்லாமல் போகவில்லை.
இந்த பெரும்பான்மை எண்ணக்கருவை கேள்விக்குட்படுத்தும் ஒரு ஆவணமாக ராஜன் ஹுல் ஆங்கிலத்தில் எழுதிய Ester Sunday attack ( when The Mystery Hand Raised ) என்ற நூலாகும்.
இந்த ஆங்கில நூலை தமிழுக்கு மொழி பெயர்த்துள்ளார் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா ஃபோரத்தின் தலைவரும் மூத்த ஊடகவியலாளருமான என் எம். அமீன்.
"உயிர்த்த ஞாயிறு அனர்த்தம்" (மறைகரம் வெளிப்பட்டபோது) எனும் தலைப்பில் மொழி பெயர்க்கப்பட்ட இந்த நூலின் வெளியீட்டு விழா ஜனவரி மாதம் 30 ஆம் திகதி இலங்கை மன்றக் கல்லூரி கேட்போர் கூடத்தில் இடம்பெறவிருக்கின்றது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னரான முஸ்லிம் சமூகம் எதிர்கொண்ட சவால்களை, அவமானங்களை, எதிர்ப்புகளை அடையாளப்படுத்தி அச்சவால்கள் மூலம் பெற்றுக் கொண்ட அனுபவத்தினையும், முஸ்லிம் சமூகத்தை இந்த அவப்பெயரிலிருந்து பாதுகாப்பதில் அரசியல்வாதியாக மேற்கொண்ட முன்னெடுப்புகளையும் ஆவணப்படுத்தும் முகமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் எழுதிய "நாங்கள் வேறானவர்கள் அல்ல மண்ணின் வேரானவர்கள்" என்ற நூலின் வெளியீடும் இதே மேடையில் இதே நேரத்தில் இடம் பெற உள்ளது..
முஸ்லிம் சமூகத்தின் மீது பொய்யாக இட்டுக்கட்டப்பட்ட வதந்திகளுக்கு இவ்விரு நூல்களும் ஏதோ ஒரு வகையில் பதிலாக அமையலாம்.
இவ்விரு நூல்களினதும் வெளியீட்டு விழாவை ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
நாச்சியாதீவு பர்வின்
No comments:
Post a Comment