ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ்ஸை அரசுக்குச் சொந்தமான நிறுவனமாக தொடர்ந்தும் நிர்வகிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது - அமைச்சர் பிமல் ரத்நாயக்க - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 28, 2025

ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ்ஸை அரசுக்குச் சொந்தமான நிறுவனமாக தொடர்ந்தும் நிர்வகிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது - அமைச்சர் பிமல் ரத்நாயக்க

(எம்.மனோசித்ரா)

ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்தை விற்பனை செய்வதை அல்லது தனியார் மயமாக்கலைத் தடுக்கும் வகையில், அரசுக்குச் சொந்தமான நிறுவனமாக அதை தொடர்ந்தும் நிர்வகிப்பதை உறுதி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

ஞாயிற்றுக்கிழமை (27) போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அதிகாரிகளுடன் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சிடமுள்ள மிக முக்கியத்துவம் வாய்ந்தது விமான சேவை அதிகார சபையாகும். இலங்கை மற்றும் இலங்கைக்கு வரும் விமானங்களுடன் தொடர்புடைய சகல விடயங்களுக்கும் இந்நிறுவனமே உத்தரவாதமளிக்கிறது.

இவ்வாண்டு விமானங்களின் ஊடாக 88 இலட்சம் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். இவ்வாண்டு சுற்றுலாப் பயணிகள் மாத்திரம் 30 இலட்சம் பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கின்றோம்.

எனவே விமானங்கள் மற்றும் விமான நிலையங்களில் தரம் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அதேவேளை தேசிய விமான சேவையையும் மேம்படுத்த வேண்டியுள்ளது. எதிர்காலத்தில் சிறந்த விமான சேவை முன்னெடுக்கப்பட வேண்டுமெனில் அதன் தரத்தை உறுதிப்படுத்த வேண்டும்.

எனவேதான் அது குறித்த கலந்துரையாடல்கள் துறைசார் அதிகாரிகளுடன் முன்னெடுக்கப்பட்டது. சில விமான சேவை நிறுவனங்கள் செலுத்த வேண்டிய வரியை இன்னும் செலுத்தவில்லை. இவ்வாறான பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்கவும் எதிர்பார்க்கின்றோம். ஸ்ரீலங்கா விமான சேவை ஜனாதிபதியின் நிதி அமைச்சின் கீழேயே நிர்வகிக்கப்படுகிறது.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் தலைவர் சரத் கணேகோடாவின் தலையீட்டின் பேரில் விமான நிறுவனம் தொடர்பாக பிற நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த அரசாங்கம் இதனை விற்பனை செய்வதற்கும் முயற்சித்திருக்கிறது.

கடந்த அரசாங்கத்தின்போது ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான 3 விமானங்கள் 3 ஆண்டுகளாக எஞ்சின்கள் இன்றி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அவற்றுக்கு மாதமொன்றுக்கு 9 இலட்சம் டொலர் செலுத்தப்பட்டிருக்கிறது. எனினும் தற்போது அவற்றில் ஒன்று இயக்கப்படுகிறது. மற்றொன்று ஏப்ரலுக்கு முன்னர் இயக்கப்படவுள்ளது. அதற்கமைய ஸ்ரீலங்கன் எயாலைன்ஸ் சேவையை விற்பனை செய்யாது நிர்வகித்து செல்வதற்கான திட்டமிடல்களே இடம்பெற்று வருகின்றன என்றார்.

No comments:

Post a Comment