யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராக பண மோசடி வழக்கு தொடரப்பட்டதால் தேவையான நடைமுறையின் ஒரு அம்சமாகவே அவர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார் என்றும், பிணை வழங்கப்படுவதால் அவர் வழக்கிலிருந்து விடுவிக்கப்படுவார் என்று அர்த்தமல்ல என நீதியமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.
யோஷித ராஜபக்ஷவுக்கு பிணை வழங்கப்பட்டமை தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் நிலவும் நிலையில் நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார அது தொடர்பில் விளக்கமளித்துள்ளார்.
அந்த வகையில் குறித்த வழக்கில் யோஷித ராஜபக்ஷ இதுவரை சந்தேகநபராக பெயரிடப்படவில்லை என்றும் நீதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “யோசித ராஜபக்ஷ தொடர்புபட்டுள்ள குறித்த பண மோசடி சம்பவம் சுமார் 8 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. இதுவரை அவர் இந்த வழக்கில் சந்தேகநபராகப் பெயரிடப்படவில்லை. உயர் நீதிமன்றத்தில் ஒரு நபருக்கு குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்பு, சந்தேகநபராக அவரிடமிருந்து வாக்குமூலம் பெறுவது அவசியம்.
வாக்குமூலம் பெறுவதற்காக அந்த நபரை சந்தேகநபராக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு சட்டமா அதிபர் பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளார். அதுதான் வழக்கமான நடைமுறை.
பிணை சட்டத்தின் விதிகளின்படி, அவர் விசாரணைகளுக்கு இடையூறு விளைவிக்காவிட்டால் அல்லது நாட்டை விட்டு தப்பிச் செல்லாவிட்டால் பிணை வழங்குவது இயல்பானது.
பிணை வழங்கப்படுவதால் அவர் வழக்கிலிருந்து விடுவிக்கப்படுவார் என்று அர்த்தமல்ல” என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
லோரன்ஸ் செல்வநாயகம்
No comments:
Post a Comment