(எம்.வை.எம். சியாம்)
கடந்த சில வருடங்களாக மந்தகதியில் முன்னெடுக்கப்பட்ட விசாரணை நடவடிக்கைகள் தற்போது துரிதப்படுத்தப்பட்டுள்ளன. சட்டத்துக்கு ஏற்ப விசாரணைகள் இடம்பெறுகின்றன. எதிர்காலத்தில் சில கைது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.
அண்மைய நாட்களாக இடம்பெற்ற சில கைது நடவடிக்கைகள் தொடர்பில் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, கடந்த சில வருடங்களாக மந்தகதியில் இடம்பெற்ற விசாரணைகளை தற்போது எந்தவித அரசியல் அழுத்தமும் இன்றி விரைவாக விசாரணைகளை முன்னெடுத்துள்ளோம். இதற்கமைய எதிர்காலத்தில் சில கைது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.
விசேடமாக சட்டமா அதிபரின் வழிகாட்டலுக்கமைய நிதி தூய்தாக்கல் சட்டத்தின் கீழ் பல விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கடந்த காலங்களில் இடம்பெற்ற கொலைகள் தொடர்பிலும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளோம்.
கேள்வி
யோஷிதவின் கைதில் அரசியல் தலையீடு உள்ளதா?
பதில்
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இங்கு அரசியல் தலையீடு இருக்கவில்லை. விடயத்துக்கு பொறுப்பான அமைச்சரும் இதில் தலையீடு செய்யவில்லை. சந்தேகநபர்களை எவ்வாறு நடத்த வேண்டும் என்பதை விசாரணை அதிகாரியே தீர்மானிக்க வேண்டும். அதற்கு பதிலாக ஜனாதிபதியோ அமைச்சரோ எந்தவித தலையீடு செய்யவில்லை. சட்டத்துக்கு அமையவே விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
கேள்வி
ஊழல் மற்றும் மோசடி குற்றச் சாட்டுகளின் கீழ் கைது செய்யப்படும் சந்தேகநபர்கள் ஏன் பிணையில் விடுவிக்கப்படுகின்றனர்?
பதில்
வழக்கு விசாரணைகளை முன்னெடுக்கபடும்போது போதுமான சாட்சியங்கள் இருக்குமாயின் கைது நடவடிக்கையை நாம் முன்னெடுப்போம். கைது செய்ததன் பின்னர் நாம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவோம். பிணையில் விடுவிப்பதையோ சிறையில் தடுத்து வைத்திருப்பதையோ எதிர்கால நடவடிக்கைக்காக சந்தேகநபரை பங்கு பற்றுதலையே எதிர்பார்க்கிறோம். அவ்வாறு இடம்பெறவில்லையாயின் அவர் நாட்டை விட்டு தப்பிச் செல்ல முடியும்.
எனவே அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதன் பின்னர் அவரால் நாட்டை விட்டு தப்பிச் செல்ல முடியாது. அது போன்று சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தாலும் அவரால் நாட்டை விட்டு தப்பிச் செல்ல முடியாது. சட்டத்துக்கு ஏற்பவே விசாரணைகள் முன்னெடுக்கப்படும். சந்தேகநபர் குற்றமிழைத்திருந்தால் அவருக்கு தண்டனை பெற்றுக் கொடுக்கப்படும் என்றார்.
No comments:
Post a Comment