(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
இனவாதம், மதவாதம், மொழிவாதம் மற்றும் பிரதேசவாதம் ஆகியவற்றால் நாடு அசுத்தமாக்கப்பட்டுள்ளது. இவை கடந்த காலங்களில் தேர்தல் பிரச்சாரமாக காணப்பட்டது. ஆனால் தற்போது அவை தோல்வியடைந்துள்ளது. சுத்தமான நாட்டை உருவாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமாயின் சுத்தமான வீட்டை விரும்பும் கட்சிக்காரர்கள் என்ற வகையில் அதை ஆதரிக்க தயாராக இருக்கிறோம் என இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (21) நடைபெற்ற கிளீன் ஸ்ரீலங்கா செயற்திட்டம் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது, கிளீன் ஶ்ரீலங்கா என்ற எண்ணக்கரு சிறந்த விடயமாகும். வீட்டை சுத்தமாக வைத்திப்பதற்கு நாம் விரும்புவதைப் போன்று நாட்டை சுத்தமாக வைத்திருக்கவும் விரும்புகின்றோம்.
அந்த வகையில் இந்த கிளீன் ஶ்ரீலங்கா திட்டம் நல்ல விடயமே. எமது நாடு இலஞ்சம், ஊழல், மோசடி, திருட்டு மற்றும் குற்றச் செயல்கள் என பல முறையற்ற செயற்பாடுகளினால் சூழ்ந்துள்ளது.
கடந்த 77 வருடங்களாக நாட்டை ஆட்சி செய்தவர்கள் நாட்டில் சுத்தத்தை ஏற்படுத்தவில்லை என்பது கிளீன் ஶ்ரீலங்கா என்ற திட்டத்தின் மூலம் வெளிப்படுத்தப்படுகின்றது.
இதனால் தூய்மையான விடயங்களை நாங்கள் ஆதரித்தே ஆக வேண்டும். ஊழல், மோசடி, திருட்டு மற்றும் வீண் விரயம் இல்லாத நாட்டை உருவாக்குவதற்கு அனைவரும் விரும்புவர் என்றே நம்புகின்றோம்.
கடந்த காலங்களில் பல குற்றச் செயல்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால் குற்றவாளிகள் கைது செய்யப்படவும், தண்டிக்கப்படவும் இல்லை என்ற குற்றச்சாட்டுக்களும் உள்ளன.
பாரிய குற்றங்களை செய்துவிட்டு கௌரவர்களாக அவர்கள் உலா வருவதை காணக்கூடியதாக இருக்கின்றது. இதனால் இந்த விடயமும் கிளீன் ஶ்ரீலங்கா திட்டத்திற்குள் உள்வாங்கப்பட வேண்டும். இந்த நாடு தூய்மையாக இருந்திருந்தால் புத்திஜீவிகள் நாட்டை விட்டு போயிருக்க மாட்டார்கள்.
இனவாதம், மதவாதம், மொழிவாதம் மற்றும் பிரதேசவாதம் என்று பல கூறுகளால் நாடு அசுத்தமாக்கப்பட்டுள்ளது. இந்த கூறுகளை வைத்துக் கொண்டுதான் ஆட்சியாளர்கள் தேர்தலில் பிரசாரம் செய்தனர்.
ஆனால் கடந்த காலத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் இந்த அடிப்படைவாதங்கள் செல்லுபடியற்றதாகியுள்ளது. மக்கள் சிறந்த மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார்கள். இதனை பயன்படுத்தி நீங்கள் சுத்தமான நாட்டை உருவாக்க நடவடிக்கை எடுத்தால் நாங்கள் சுத்தமான வீட்டை விரும்பும் கட்சிக்காரர்கள் என்ற வகையில் அதனை ஆதரிக்க தயாராக இருக்கின்றோம்.
அதேவேளை இந்த விடயம் செயற்பாட்டு வடிவத்தை பெற வேண்டும். சொல்வது இலகுவானதுதான் ஆனால் அதனை செயற்படுத்துவதே கடினமாக இருக்கும்.
எவ்வாறாயினும் இந்த விடயத்தை அமுல்படுத்தி ஊழல் மோசடியற்ற, போதையற்ற மற்றும் குற்றவாளியற்ற நாட்டை உருவாக்குவது ஆரோக்கியமானதாக இருக்கும். இதற்காக இன, மத ரீதியான சட்டதிட்டங்கள் தீட்டப்படுவதை அகற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.
இதேவேளை விவசாயிகள் விடயத்திலும் இந்த வேலைத்திட்டத்தில் அவர்களின் உற்பத்திகளுக்கு உத்தரவாத விலைகளை வழங்க வேண்டும். இல்லாவிட்டால் விவசாயிகள் பயிர்ச் செய்கைகளில் இருந்து விலகும் நிலைமை ஏற்படலாம். அத்துடன் தற்போது வெள்ள அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ளன. கிரான் பாலத்தை புனரமைப்பு செய்து அங்கே கஸ்ட பிரதேசங்களில் உள்ள மக்களுக்கு நிவாரணங்களை கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மோசமான பாதைகளும் உள்ளன. வாகரை பிரதேசத்தில் கட்டுமுறிவு பாதை காட்டு வழி பாதையாகும். அங்கே யானைகளின் அச்சுறுத்தல் உள்ளன. அங்கே பழங்குடி மக்கள் மற்றும் மீனவர்கள் வசிக்கின்றனர். கிளீன் ஶ்ரீலங்கா திட்டத்தில் அந்த பாதை புணரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுடன் மூங்கிலாற்று வீதியையும் புனரமைக்க வேண்டும் என்று கோருகின்றேன் என்றார்.
No comments:
Post a Comment