மதுபானசாலை அனுமதிப்பத்திரங்களை இரத்துச் செய்ய முடியாது - அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 21, 2025

மதுபானசாலை அனுமதிப்பத்திரங்களை இரத்துச் செய்ய முடியாது - அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவிப்பு

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

அரசாங்கம் புதிதாக மதுபானசாலை அனுமதிப்பத்திரங்களை வழங்கவில்லை, வழங்கப்போவதுமில்லை. சட்ட ரீதியில் வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரங்களை பலவந்தமான முறையில் இடைநிறுத்தினால் சட்ட சிக்கல்களை ஏற்படுத்தும். அனுமதிப்பத்திரம் சட்ட ரீதியில் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து அது சட்ட ரீதியான ஆவணமாகும். பலவந்தமான முறையில் செயற்பட முடியாது என சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (21) நடைபெற்ற கிளீன் ஸ்ரீலங்கா செயற்திட்டம் மீதான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன், 'கல்முனை - நீலாவணை பகுதியில் புதிதாக மதுபான நிலையங்களை திறப்பதற்கு எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு அப்பிரதேச மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். கடந்த அரசாங்கம் வழங்கிய மதுபானசாலை அனுமதிப்பத்திரங்களை இரத்துச் செய்வதாக அரசாங்கம் குறிப்பிட்டது. ஆனால் இதுவரை அதற்கான நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படவில்லை' என்று குறிப்பிட்டார்.

இதற்கு பதிலளிக்கையிலேயே போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சரும் சபை முதல்வருமான பிமல் ரத்நாயக்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது, தேசிய மக்கள் சக்தி தலைமையிலான எமது அரசாங்கம் புதிதாக மதுபானசாலை அனுமதிப்பத்திரங்கள் ஏதும் விநியோகிக்கவில்லை.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் பெரும்பாலான மதுபானசாலை அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் மதுபானசாலை அனுமதிப்பத்திரங்கள் குறித்து பாராளுமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு ஹன்சாட்டில் பதியப்பட்டுள்ளது.

அனுமதிப்பத்திரம் சட்ட ரீதியில் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து அது சட்ட ரீதியான ஆவணமாக கருதப்படும். அரசியல் ரீதியில் விருப்பம் இல்லாவிடினும் அதனை இரத்து செய்வது சட்ட செயற்பாடாகும். அரசாங்கத்துக்கு பலவந்தமான முறையில் இரத்துச் செய்ய முடியாது. இருப்பினும் நிர்வாக கட்டமைப்பில் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.

இவ்வாறான பழைய குப்பை மேடுகளை கிளீன் செய்யவே முயற்சிக்கிறோம். இதுவே செய்த அழிவாகும். அரசாங்கம் புதிதாக மதுபானசாலை அனுமதிப்பத்திரங்களை வழங்கப்போவதில்லை.

சட்ட ரீதியில் வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரங்களை பலவந்தமான முறையில் இடைநிறுத்தினால் சட்ட சிக்கல்களை ஏற்படுத்தும். இருப்பினும் நிர்வாகம் மற்றும் சமூக கட்டமைப்பில் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்றார்.

No comments:

Post a Comment