(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
கிளீன் ஶ்ரீலங்கா வேலைத்திட்டம் யாருக்கும் எதிரானதல்ல. அதனால் யாரும் இது தொடர்பில் பதற்றப்படத் தேவையில்லை. நாட்டு மக்கள் இந்த அரசாங்கத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கையை நாங்கள் அவ்வாறே பாதுகாப்போம் என பிரதி அமைச்சர் முனீர் முழப்பர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (21) இடம்பெற்ற கிளீன் ஶ்ரீலங்கா வேலைத்திட்டம் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், கிளீன் ஶ்ரீலங்கா வேலைத்திட்டம் இன்று மக்கள் மத்தியிலும் ஊடகங்களிலும் பாரியளவில் பேசப்படும் விடயமாக மாறி இருக்கிறது. ஆனால் இந்த வேலைத்திட்டம் மூலம் அனைவருக்கும் வளமான நாடு அழகான வாழ்க்கை ஒன்றை ஏற்படுத்திக் கொடுப்பதே நோக்கமாகும்.
ஆனால் ஒரு சில அரசியல்வாதிகள் கிளீன் ஶ்ரீலங்கா வேலைத்திட்டத்தை முச்சக்கர வண்டி, பஸ் வண்டிகளில் மேலதிக உதிரிப்பாகங்களை அகற்றுவது என இடத்துக்கு வரையறுக்க முற்பட்டுள்ளார்கள். ஆனால் கிளீன் ஶ்ரீலங்கா வேலைத்திட்டம் மூலம் நாட்டு மக்கள் அனைவரையும் வளமாக்கி நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதும் இதன் ஓர் அங்கமாகும். அதற்கான நடவடிக்கையே தற்போது மேற்கொள்ளப்படுகிறது.
என்றாலும் ஒழுக்கமுள்ள, சட்டத்தை மதிக்கின்ற நாட்டொன்றை ஏற்படுத்துவதற்கு ஒழுக்கமில்லாத, சட்டத்தை மதிக்காமல் செயற்படுபவர்களுக்கு விருப்பம் இல்லை. அவர்களே இதற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வேலைத்திட்டம் மூலம் வெளிப்படையான மாற்றம் அல்லாமல் நிரந்தரமான மாற்றத்தை ஏற்படுத்துவதே எமது நாேக்கம்.
அரசாங்கம் அதிகாரத்துக்கு வந்து இதுவரை என்ன மாற்றத்தை செய்திருக்கிறது என சிலர் கேள்வி கேட்கின்றனர். ஆனால் அரசாங்கம் மேற்கொண்டிருக்கின்ற வேலைத்திட்டங்கள் கேள்வி கேட்பவர்களுக்கு தெரியாவிட்டாலும் எம்மீது நம்பிக்கை வைத்து, வாக்களித்த மக்களின் நம்பிக்கையை பாதுகாக்கும் வகையில் அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருப்பது அந்த மக்களுக்கு தெரியும்.
அதேபோன்று எதிர்க்கட்சியில் சிலர் அரசாங்கம் ஊடகங்களை அடக்குவதற்கு முயற்சிப்பதாக ஓலக்குரல் இடுவதை நாங்கள் காண்கிறோம். 2008ஆம் ஆண்டு ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டனர், கொள்ளப்பட்டனர். அப்போது இவர்கள் என்ன செய்தார்கள். யாருடைய காலத்தில் ஊடக நிறுவனங்கள் தாக்கப்பட்டன, எரிக்கப்பட்டன என்பதை மறந்துள்ளனர்.
அதனால் எமது கிளீன் ஶ்ரீலங்கா வேலைத்திட்டம் எவருக்கும் எதிரான வேலைத்திட்டம் அல்ல. அனைவருக்காகவும் கட்டியெழுப்பப்பட்ட வேலைத்திட்டமாகும். அதனால் கிளீன் ஶ்ரீலங்கா வேலைத்திட்டம் தொடர்பில் யாரும் பதற்றப்படத் தேவையில்லை.
எமது உடலில் ஒரு சதைத்துண்டு இருக்கிறது. அது தூய்மையடைந்தால் முழு உடம்பும் தூய்மையடையும். அது அசுத்தமடைந்தால் முழு உடலும் அசுத்தமடையும் என நபிகள் நாயகம் தெரிவித்திருக்கிறார்.
அதனால் கிளீன் ஶ்ரீலங்கா என்பது ஒட்டு மொத்த நாட்டையும் சுத்தப்படும் வேலைத்திட்டமாகும் என்றார்.
No comments:
Post a Comment