வேலை நிறுத்தங்களில் ஈடுபடாது கல்வி செயற்பாடுகளை தடையின்றி முன்னெடுத்துச் செல்லுங்கள் : யாழ்ப்பாண பல்கலைக்கழக பிரச்சினைக்கு தீர்வினை வழங்குவோம் என்கிறார் அமைச்சரவை பேச்சாளர் - News View

About Us

About Us

Breaking

Wednesday, January 29, 2025

வேலை நிறுத்தங்களில் ஈடுபடாது கல்வி செயற்பாடுகளை தடையின்றி முன்னெடுத்துச் செல்லுங்கள் : யாழ்ப்பாண பல்கலைக்கழக பிரச்சினைக்கு தீர்வினை வழங்குவோம் என்கிறார் அமைச்சரவை பேச்சாளர்

(எம்.மனோசித்ரா)

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினை குறித்து அறிக்கை கோரப்பட்டுள்ளது. கல்வி அமைச்சு விரைவில் இவ்விவகாரத்தில் தலையிட்டு தீர்வினை வழங்கும். எனவே வேலை நிறுத்தங்களில் ஈடுபடாது கல்வி செயற்பாடுகளை தடையின்றி முன்னெடுத்துச் செல்ல ஒத்துழைக்குமாறு அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கோரியுள்ளார்.

செவ்வாய்க்கிழமை (28) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இவ்வாறு கோரிக்கை விடுத்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினை குறித்து அறிக்கையொன்றைக் கோருவதற்கு அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டது.

கல்வி அமைச்சு வெகு விரைவில் இவ்விவகாரத்தில் தலையிட்டு பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்கும். எனவே எவ்வித வேலை நிறுத்தங்களும் இன்றி பல்கலைக்கழக நடவடிக்கைகளை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்லுமாறு கோருகின்றோம்.

எந்தவொரு பிரச்சினைக்கும் வேலை நிறுத்தங்களுக்குச் செல்வதற்கு முன்பு எம்முடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க முடியும்.

விரிவுரையாளர்களானாலும், மாணவர்களானாலும் எந்த சந்தர்ப்பத்திலும் எம்முடன் கலந்துரையாட முடியும். அரசாங்கத்துடன் கலந்துரையாடுவதற்கு யாருக்கும் எவ்வித தடைகளோ கட்டுப்பாடுகளோ இல்லை.

கடந்த காலங்களில் பல்வேறு காரணிகளுக்காக வேலை நிறுத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதால் கல்வி கற்பதற்குரிய சந்தர்ப்பங்கள் இழக்கப்பட்டுள்ளன.

எனவே பல்கலைக்கழக கட்டமைப்பில் எவ்வித பிரச்சினைகளையும் ஏற்படுத்தாமல் கல்வி செயற்பாடுகளை தடையின்றி முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதே எமது தேவையாகும். அதற்கு தேவையான சகல ஒத்துழைப்புக்களையும் நாம் வழங்குவோம் என்றார்.

No comments:

Post a Comment