முல்லைத்தீவு பிரதேச வைத்தியசாலையில் வைத்தியர் இன்மையால் 29.01.2025 இன்று சிறுது நேரம் வெளிநோயாளர் பிரிவின் வைத்திய சேவைகள் தடைப்பட்டிருந்தன.
இந்நிலையில் இது குறித்து பொதுமக்களால் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனிடம் முறையிடப்பட்டதையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் இது குறித்து முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருடன் தொலைபேசியில் கலந்துரையாடி பிறிதொரு வைத்தியரை வைத்திய சேவையில் ஈடுபடுத்துவதற்குரிய நடவடிக்கை மேற்கொண்டார்.
அத்தோடு உடனடியாக வைத்தியசாலைக்கு நேரடியாகச் சென்று வைத்திய சேவையில் ஈடுபட்டிருந்த வைத்தியருடன் கலந்துரையாடியதுடன், வைத்திய சேவைகளைப் பெறுவதற்கு வந்த பொதுமக்களுடனும் கலந்துரையாடலில் ஈடுபட்டு அவர்களின் குறைபாடுகளையும் கேட்டறிந்தார்.
இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில், மருத்துவத் தேவைப்பாடுகள் இங்கு அதிகமாகக் காணப்படுகின்றன. முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் இந்த தேவைப்பாடுகள் தொடர்பாக என்னிடம் ஏற்கனவே தெரியப்படுத்தியிருக்கின்றார்.
முல்லைத்தீவு பிரதேச வைத்தியசாலை மாத்திரமல்லாது, முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் காணப்படும் தேவைப்பாடுகள் தொடர்பிலும் என்னிடம் தெரியப்படுத்தியுள்ளனர்.
இந்த தேவைப்பாடுகள் தொடர்பில் ஏற்கனவே எம்மால் சுகாதார அமைச்சரின் கவனத்திற்கும் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த குறைபாடுகளைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 29.01.2025 இன்று முல்லைத்தீவு பிரதேச வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவில் நோயாளர்களைப் பார்வையிடுவதற்கு வைத்தியர்கள் எவருமில்லை என, வைத்திய சேவைகளைப் பெறுவதற்கு வருகை தந்த பொதுமக்கள் என்னிடம் முறையிட்டிருந்தனர்.
அத்தோடு வைத்திய சேவைகளைப் பெறுவதற்கு வந்த பொதுமக்கள் அவதிப்படுவதாகவும் என்னிடம் முறையிடப்பட்டிருந்தது.
அதற்கமைய இது தொடர்பில் முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் இதுகுறித்து தொலைபேசியில் கலந்துரையாடியிருந்தேன்.
இந்நிலையில் தாம் உடனடியாகப் பிறிதொரு வைத்தியரை கடமையில் ஈடுபடுத்துவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாகத் தெரிவித்திருந்தார்.
அந்த வகையில் மக்களின் முறைப்பாட்டிற்கு அமைவாக முல்லைத்தீவு பிரதேச வைத்தியசாலைக்கு நேரடியாக வருகை தந்து நிலமைகளைப் பார்வையிட்டிருந்தேன்.
இங்கு பிறிதொரு வைத்தியர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டு வைத்திய சேவையில் ஈடுபட்டுத்தப்பட்டிருப்பதை அவதானிக்க முடிந்தது.
இங்கு நிலவும் மருத்துவத் தேவைகள், வைத்திய ஆளணிப் பற்றாக்குறைகள் உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment