(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
அஸ்வெசும நலன்புரித் திட்ட நிவாரண கொடுப்பனவை பெறும் பயனாளர்களின் தரவுகள் மீள் பரிசீலனை செய்யப்படுகிறது. தகுதியுடையவர்களுக்கு நிச்சயம் நிவாரண கொடுப்பனவு வழங்கப்படும். சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை செயற்படுத்தும்போது பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் மாற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியபெரும தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (21) நடைபெற்ற அமர்வில் வாய் மூல விடைக்கான வினாக்களின்போது எதிர்க்கட்சி உறுப்பினர் சித்ரால் பெர்ணான்டோ முன்வைத்த கேள்விகளுக்கு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் பதிலளித்ததாவது, இலங்கைக்கும், சர்வதேச நாணய நிதியத்துக்கும் இடையிலான நீட்டிக்கப்பட்ட கடன் செயற்திட்ட இரு தரப்பு ஒப்பந்தம் கடந்த 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கைச்சாத்திடப்பட்டது. பொருளாதார மீட்சிக்காக ஏற்றுக் கொள்ளப்பட்ட நிபந்தனைகளால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை அறிவோம்.
சர்வதேச நாணய நிதியத்தின் செயற்திட்டங்களை அமுல்படுத்த வேண்டிய தேவை காணப்படுகிறது. நிபந்தனைகளை அமுல்படுத்தும்போது அதனால் மக்கள் பாதிக்கப்படாத வகையில் செயற்படுவதற்கு உரிய திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளன.
உழைக்கும்போது செலுத்தும் வரி குறைக்கப்பட்டுள்ளது. பிள்ளைகளின் போசணை மட்டத்தை கருத்திற் கொண்டு, யோகட் மற்றும் தேசிய மட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் பால் உற்பத்திகளின் வரி குறைக்கப்பட்டுள்ளது. 30 சதவீதமாக காணப்பட்ட ஏற்றுமதி வரி 15 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்களின் கல்வி மேம்பாட்டை கருத்திற் கொண்டு 6000 ரூபா நிவாரண கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கான உர நிவாரண தொகை 25 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
கடற்றொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஒரு லீற்றர் டீசலுக்கான வரி 15 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஆழ்கடல் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் மீனவர்களுக்கு 3 இலட்சம் ரூபா வரையில் டீசலுக்கு நிவாரணம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வரி வலையமைப்பை உறுதியான முறையில் பேணுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அஸ்வெசும நலன்புரித் திட்ட பயனாளர்கள் குறித்து விசேட கனவம் செலுத்தப்பட்டுள்ளது. நிவாரண கொடுப்பனவு பெறாத தரப்பினர் குறித்து விசேட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தகுதியுள்ளவர்களுக்கு நிச்சயம் நிவாரண கொடுப்பனவு வழங்கப்படும் என்றார்.
No comments:
Post a Comment