வவுனியாவிலுள்ள பெருமளவான மக்களுக்கு காணி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படாமலிருப்பது குறித்து வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் விளக்கம் கோரியுள்ளார்.
இந்நிலையில் காணி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கு துரித நடவடிக்கை எடுக்கப்படுமென வவுனியா மாவட்ட செயலர் பீ.ஏ.சரத்சந்திர தெரிவித்துள்ளார்.
வவுனியா மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலேயே குறித்த விடயஙங்கள் பேசப்பட்டுள்ளன.
இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கருத்துத் தெரிவிக்கையில், காணி அனுமதிப்பத்திரம் வழங்கப்படவில்லை என்ற குறை வவுனியா மக்கள் பலராலும் முன்வைக்கப்படுகின்றது.
குடியிருக்கும் காணிகளுக்குக் கூட காணி அனுமதிப்பத்திரங்களின்றி ஏராளமான மக்கள் இருப்பதாக அறியமுடிகின்றது. இதற்கான விளங்கங்களை அறிய விரும்புகின்றேன்.
மக்களுக்கான காணி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படாமைக்கான காரணம் என்ன? என இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்நிலையில் வவுனியா மாவட்ட செயலர் பீ.ஏ.சரத்சந்திர இதற்குப் பதிலளிக்கையில், தற்போது பிரதேச செயலர்கள் காணிக் கச்சேரியை நடாத்தி மக்களுக்கான காணி அனுமதிப்பதிரங்களை வினியோகிக்கின்ற நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
காணி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான துரித வேலைத்திட்ங்களும் அண்மையில் இடம்பெற்றது. சில தாமதங்கள் அதில் இருந்திருக்கக்கூடும்.
அதேவேளை பிரதேச செயலாளர்கள் பிரதேச செயலக மட்டங்களின் ஊடாக முற்றாக காணியற்றோர், அனுமதிப்பத்திரம் பெற்றோர், தமது காணிகளுக்கான அனுமதிப்பத்திரங்கள் இன்றி அனுமதிப்பத்திரத்திற்காக பதிவுசெய்துள்ளோர் என்ற அடிப்படையில் விபரங்களை துரிதமாகப் பெற்று அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குரிய செயற்றிட்டங்களைச் செய்வதற்கு எதிர்பார்த்துள்ளோம்.
அத்தோடு அடுத்த மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின்போது இந்த விடயம் தொடர்பான விபரங்களையும் தங்களிடம் கையளிப்போம்.
தற்போது 80 வீத காணி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றது.
2013, 2014ஆம் வருட காலப்பகுதியிலே அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டபோது, அதைப் பெறுவதற்கு உரிய நபர்கள் இல்லாமலுள்ள சிக்கல்நிலைகளும் காணப்படுகின்றன.
இந்த அனைத்து விடயங்களையும் அடுத்த மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திற்கு முன்பாக பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களுக்குச் சமர்ப்பிக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.
No comments:
Post a Comment