அரசியல் கட்டளைகளை கடினமான முறையில் செயற்படுத்தும் பொலிஸார் : நாங்கள் அச்சமடையப் போவதில்லை என்கிறார் நாமல் ராஜபக்ஷ - News View

About Us

About Us

Breaking

Saturday, January 25, 2025

அரசியல் கட்டளைகளை கடினமான முறையில் செயற்படுத்தும் பொலிஸார் : நாங்கள் அச்சமடையப் போவதில்லை என்கிறார் நாமல் ராஜபக்ஷ

(இராஜதுரை ஹஷான்)

அரசியல் கட்டளைகளை கடினமான முறையில் செயற்படுத்தும் பொலிஸார் பாதாளக் குழுக்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமென ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட தமது சகோதரரான யோஷித ராஜபக்ஷவை சனிக்கிழமை (25) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு சென்று சந்தித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, எனக்கு முன்னதாகவே எனது தம்பி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு வந்துள்ளார். அவரை பார்ப்பதற்காகவே வந்தேன். விடுமுறை தினத்தன்றும் பொலிஸார் பொறுப்புடன் செயற்பட்டு தங்காலையில் இருந்து யோஷித ராஜபக்ஷவை கொழும்புக்கு பாதுகாப்பாக அழைத்துக் கொண்டு வந்ததற்கு பொலிஸாருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

அரசியல் கட்டளைகளை கடினமான முறையில் செயற்படுத்தும் பொலிஸார் பாதாளக் குழுக்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். ஏனெனில் கடந்த காலங்களை காட்டிலும் இந்த மாதம்தான் அதிகளவான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் நாட்டில் பதிவாகியுள்ளன.

நாட்டு மக்கள் பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ள நிலையில், அந்தப் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வு பெற்றுக் கொடுக்கவில்லை. அரசியல் பழிவாங்களுக்காக இவ்வாறு கைது செய்து மக்களின் மனங்களை வெல்வதற்கு முயற்சிக்கிறது.

சட்டத்தை செயற்படுத்துவதாக குறிப்பிட்டுக் கொண்டு கேவலமடைய வேண்டாம் என்று அரசாங்கத்திடம் குறிப்பிட்டுக் கொள்கிறோம். நல்லாட்சி அரசாங்கத்தின்போது எம்மீது சுமத்தப்பட்ட போலியான வழக்குகளுக்கு இந்த அரசாங்கம் உயிர் கொடுக்க முயற்சிக்கிறது.

நல்லாட்சி அரசாங்கத்தில் அரசியல் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட ஊழல் ஒழிப்பு குழுவின் தலைவர்தான் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சராக பதவி வகிக்கிறார். ஆகவே எமக்கு எதிரான செயற்பாடுகள் இனி தீவிரமடையலாம். இருப்பினும் நாங்கள் அச்சமடையப் போவதில்லை என்றார்.

No comments:

Post a Comment