வடக்கு,கிழக்கில் நீடிக்கும் மழையுடனான காலநிலை காரணமாக விவசாயிகள் பெரும் நெருக்கடிக்குள் சிக்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான வைத்தியர் சத்தியலிங்கம் நெல்லுக்கான நிர்ணய விலையை உடனடியாக அறிவிக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.
இவ்விடயம் சம்பந்தமாக அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு, கிழக்கில் மழையுடனான காலநிலை நீடித்துக் கொண்டிருக்கின்றது. இதன் காரணமாக, நெற் பயிர்ச் செய்கையில் ஈடுபட்ட விவசாயிகள் பெரும் நெருக்கடிகளுக்கு உள்ளாகியுள்ளனர்.
குறிப்பாக விவசாய நிலங்கள் பெருமளவில் நீரில் மூழ்கியுள்ளன. அவசரமாக அறுவடை செய்துள்ள விவசாயிகள் ஈரப்பதமாக உள்ள நெல்லை களஞ்சியப்படுத்த முடியாது தடுமாறுகின்றனர். நெல்லை உலர்த்துவதற்கான ஏதுவான நிலைமைகளும் காணப்படவில்லை.
அதுமட்டுமன்றி நெல் கொள்வனவில் ஈடுபடுகின்ற தரப்புக்கள் நிர்ணய விலையொன்றில் அவற்றை பெறுவதற்கு தயக்கம் காண்பிக்கின்றன. ஒவ்வொரு நாளும் வெவ்வேறு விலைகளில் அத்தரப்புக்கள் கொள்வனவில் ஈடுபடுகின்றன.
இதன் காரணமாக, நெல்லை விற்பனை செய்வதிலும் நியாமான விலைகள் கிடைக்காது, செய்கைக்காக செலவழித்த பணத்தைக் கூட பெற முடியாதும் தடுமாற்றத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
குறிப்பாக, வவுனியா மாட்டத்தில் மட்டும் இதுவரையில் 1200 ஏக்கர் நெற் செய்கை நிலங்கள் முழுமையாக பதிக்கப்பட்டுள்ளது. இதனைவிடவும் 12 ஆயிரம் ஏக்கர் உளுந்து விளைநிலங்கள் முற்றாக அழிவடைந்துள்ளன.
தென்னிலங்கையில் இந்த போகத்தில் நெல் அறுவடை பாரிய அளவில் இல்லாத நிலையில் வடக்கு, கிழக்கிலேயே அதிகளவில் நெற் செய்கை இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் அரசாங்கம் நெற் கொள்வனவு தொடர்பில் உரிய கவனத்தைச் செலுத்தாதும், நிர்ணய விலையை அறிவிக்காதும் பராமுகமாகச் செயற்படுவதனது வருந்ததக்க விடயமாகும்.
ஆகவே, சமத்துவக் கோட்பாட்டை வெளிப்படுத்திவரும் அரசாங்கம் முதலில் விவசாயிகள் விடயத்தில் விசேட கவனம் எடுத்து உடனடியாக நெல்லுக்கான நிர்ணய விலையை அறிவிப்பதுடன் ஏனைய பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான இழப்பீடுகள் தொடர்பிலும் நடவடிக்கைகளை தாமதமின்றி எடுக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.
No comments:
Post a Comment