யோஷிதவிடமிருந்த 9 துப்பாக்கிகளில்​ 07 அமைச்சினால் கையகம், இனி ஒருவருக்கு ஒன்று மாத்திரமே - பாதுகாப்பு அமைச்சு - News View

About Us

About Us

Breaking

Wednesday, January 29, 2025

யோஷிதவிடமிருந்த 9 துப்பாக்கிகளில்​ 07 அமைச்சினால் கையகம், இனி ஒருவருக்கு ஒன்று மாத்திரமே - பாதுகாப்பு அமைச்சு

 (எம்.மனோசித்ரா)

நாட்டில் எந்தவொரு பிரஜைக்கும் தற்பாதுகாப்பிற்காக ஒரு துப்பாக்கியை மாத்திரம் வழங்குவதற்கு கொள்கை ரீதியான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதற்கு புலனாய்வு அறிக்கை அவசியமாகும். அந்த வகையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷவிடமிருந்த 9 துப்பாக்கிகளில், 7 துப்பாக்கிகள் பாதுகாப்பு அமைச்சு ஏற்கனவே மீளப் பெறப்பட்டுள்ளதோடு, எஞ்சியுள்ள இரு துப்பாக்கிளையும் பெறுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்த தெரிவித்தார்.

பாதுகாப்பு அமைச்சில் நேற்று (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கலந்துகொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

தற்பாது காப்பிற்காக வழங்கப்பட்ட துப்பாக்கிகள் தொடர்பில் கடந்த ஆண்டு கணக்காய்வு முன்னெடுக்கப்பட்டது. அதற்கமைய 1697 அனுமதிப்பத்திரமுள்ள துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளன. 1550 பேர் துப்பாக்கிளை வைத்திருப்பதற்கான அனுமதிப்பத்திரத்தைக் கொண்டுள்ளனர். கணக்காய்வின் பின்னர் 1368 துப்பாக்கிகள் மீள அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. 182 துப்பாக்கிகள் இன்னும் கையளிக்கப்படவில்லை.

துப்பாக்கிகளைப் பெற்றுக் கொண்ட சிலர் வெளிநாடுகளில் தொழில் புரிவதால் அவர்கள் கணக்காய்வுக்கு உட்படுத்தப்படவில்லை. இவர்கள் தவிர இந்த கணக்காய்விற்கு ஒத்துழைப்பினை வழங்காதவர்களுக்கு சட்ட ரீதியான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சட்டமா அதிபர் தரப்பிலிருந்து ஆலோசனை பெற்று சட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

இவ்வாறு வழங்கப்பட்ட துப்பாக்கிள் பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படவில்லை. எனினும் அதனை உறுதியாகக் கூறவும் முடியாது. 

சிலருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட துப்பாக்கிகளும் வழங்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு அமைச்சு அதனை ஒருவருக்கு ஒன்று என வரையறுத்துள்ளது. 

அதுவும் புலனாய்வு பிரிவின் ஊடாக குறிப்பிட்டவொரு நபருக்கு துப்பாக்கி அவசியம் என்று உறுதிப்படுத்தப்பட்டால் மாத்திரமே துப்பாக்கி வழங்கப்படும். 

ஒன்றுக்கும் மேற்பட்ட துப்பாக்கிகளை வைத்திருப்பவர்களிடமிருந்து உடனடியாக அவற்றை மீளப் பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 

அந்த வகையில் யோஷித ராஜபக்ஷவுக்கு 9 துப்பாக்கிகள் வழங்கப்பட்டிருந்தன. அவற்றில் இரண்டு இன்னும் அவர் வசமே காணப்படுகிறது.

அவற்றில் ஒன்றை மீள ஒப்படைக்குமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள ஒரு துப்பாக்கியையும் தொடர்ந்தும் வழங்குவதா ? இல்லையா ? என்பதை மதிப்பீடொன்றின் பின்னரே தீர்மானிப்போம். 

பாதாள உலகக் குழுவினருக்கிடையில் இடம்பெற்று வரும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் தொடர்பில் விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றார்.

No comments:

Post a Comment