5 இலட்சம் தொன் அரிசியை மறைத்து வைத்திருப்பது யார் ? ரஞ்சித் மத்தும பண்டார - News View

About Us

Add+Banner

Monday, January 6, 2025

demo-image

5 இலட்சம் தொன் அரிசியை மறைத்து வைத்திருப்பது யார் ? ரஞ்சித் மத்தும பண்டார

Ranjith-Madduma-Bandara
(எம்.மனோசித்ரா)

நாட்டின் வருடாந்த அரிசி தேவை 23 இலட்சம் தொன் ஆகும். ஆனால் கடந்த போகத்தில் அறுவடை செய்யப்பட்ட 42 இலட்சம் தொன் நெல்லிலிருந்து 28 இலட்சம் தொன் அரிசி பெறப்பட்டுள்ளது. அவ்வாறெனில் எஞ்சிய 5 இலட்சம் தொன் அரிசியை மறைத்து வைத்திருப்பது யார் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார கேள்வியெழுப்பினார்.

ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போது இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் மூலம் இனிவரும் காலங்களில் பல்வேறு விடயங்கள் தூய்மையடையவுள்ளன. அண்மையில் முன்னாள் சபாநாயகர் க்ளீன் செய்யப்பட்டார். அதேபோன்று மேலும் பலர் களீன் செய்யப்படவுள்ளதாக தெரிகிறது. உத்தேச தேர்தல்களை எதிர்கொள்வதற்கான செயற்திட்டங்களை ஐக்கிய மக்கள் சக்தி ஏற்கவே ஆரம்பித்துவிட்டது.

புத்தாண்டு தினத்தன்றும் பாற்சோறு சமைப்பதற்கு அரிசி இருக்கவில்லை. ஒருவாரம் கடந்தும் இன்னும் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்படவில்லை. மேலதிக நெல் நாட்டில் காணப்படுகிறது. கடந்த போகத்தில் 42 இலட்சம் தொன் நெல் அருவடை செய்யப்பட்டது. இதன் மூலம் 28 இலட்சம் தொன் அரிசியை இதிலிருந்து பெற முடியும். நாட்டின் அரிசி தேவை 23 இலட்சம் தொன் ஆகும். 5 இலட்சம் தொன் அரிசி தொகையை யாரோ மறைத்து வைத்திருக்கின்றனர்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அரிசி ஆலை உரிமையாளர்களை அழைத்து அச்சுறுத்தல் விடுத்தார். மறைத்து வைக்கப்பட்டுள்ள அரிசி தொகை வெளியே கொண்டு வருவோம் என்றும், முறையான வழியில் முடியாவிட்டால் வேறு வழியிலேனும் அவற்றை மக்களுக்கு கிடைக்கச் செய்வோம் என சபதமிட்டார்.

ஆனால் தற்போது சில அரிசி ஆலை உரிமையாளர்களின் பின்னால் அரசாங்கம் மறைந்து கொண்டிருக்கிறது. இவ்வாறான உண்மைகளை வெளிப்படுத்தும் ஊடகங்கள் மீது அச்சுறுத்தல் விடுக்கப்படுகிறது. ஆனால் நாம் ஊடக ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக முன்னிற்போம்.

ஐக்கிய தேசிய கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் இணைய வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன. ஆதரவாளர்களும் இதனையே கோருகின்றனர். எதிர்காலத்தில் இது தொடர்பில் எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுப்பது என்பது குறித்து அவதானம் செலுத்துவோம். பேச்சுவார்த்தைகளின் ஊடாகவே இதற்கு தீர்வு காணப்பட வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *