வினாத்தாள்கள் கசிவு ! வடமத்திய மாகாணத்தில் பரீட்சைகள் இடைநிறுத்தம் - News View

About Us

About Us

Breaking

Monday, January 6, 2025

வினாத்தாள்கள் கசிவு ! வடமத்திய மாகாணத்தில் பரீட்சைகள் இடைநிறுத்தம்

(எம்.மனோசித்ரா)

புலமைப் பரிசில் பரீட்சை வினாத்தாளில் வினாக்கள் வெளியாகியதால் ஏற்பட்ட சர்ச்சை நிறைவுக்கு வந்து ஒரு வாரம் கடந்துள்ள நிலையில், தற்போது மீண்டுமொரு பரீட்சை வினாத்தாளிலுள்ள கேள்விகள் வெளியாகியுள்ளன. 

கடந்த 2ஆம் திகதி 2024ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணையின் இறுதிக்கட்ட கல்வி செயற்பாடுகள் ஆரம்பமாகியதையடுத்து, மூன்றாம் தவணைப் பரீட்சைகள் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில் வடமத்திய மாகாணத்தில் 11ஆம் தர மாணவர்களுக்கான சிங்கள மொழியும் இலக்கியமும் பரீட்சை வினாத்தாளிலுள்ள வினாக்கள் பரீட்சைக்கு முன்னதாகவே கசிந்துள்ளமை தெரியவந்துள்ளது.

இதன் காரணமாக திங்கட்கிழமை (06) வடமத்திய மாகாண பாடசாலைகளில் பரீட்சையை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு மாகாண கல்வி திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதனால் நேற்று (06) பரீட்சைக்காக பாடசாலைகளுக்கு சென்ற மாணவர்களுக்கு திரும்பிச் செல்ல நேரிட்டது.

இது தொடர்பில் வடமத்திய மாகாண கல்வி திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த மாகாண கல்வி செயலாளர் சிறிமேவன் தர்மசேன, சிங்கள மொழி மற்றும் இலக்கியம் தரம் 11 க்கான வினாத்தாள் கசிந்துள்ளதாக ஞாயிற்றுக்கிழமை (05) நள்ளிரவு தகவல் கிடைக்கப் பெற்றது. 

அதன் பின்னர்  08 வலயங்களில் உள்ள 30 பிரிவுகளைச் சேர்ந்த 600 க்கும் மேற்பட்ட பாடசாலைகளில் மேற்படி வினாத்தாள் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், நேற்று பிற்பகலில், 07 ஆம் திகதி மற்றும் 08 ஆம் திகதி திட்டமிடப்பட்ட விஞ்ஞானம் மற்றும் ஆங்கில வினாத்தாள்கள் வெளியானதாக தகவல் கிடைத்தது." இந்த வினாத்தாள்கள் வெளியானது தொடர்பாக அநுராதபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், சம்பவம் எவ்வாறு இடம்பெற்றது என்பதை கண்டறிய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.

எனவே இந்த பரீட்சையை தற்காலிகமாக இடைநிறுத்தி, அதற்கு பதிலாக புதிதாக வினாப்பத்திரமொன்றை தயாரித்து பிரிதொரு தினத்தில் பரீட்சையை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

இவ்வாறு பரீட்சை வினாத்தாள்களை வெளியிடுவது பரீட்சைகள் சட்டத்தின் கீழ் குற்றமாகும். எனவே இந்த குற்றத்தை இழைத்தவர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள். அல்லது கட்டாய விடுமுறையில் அனுப்பப்படுவார்கள்.' என்றார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ, சனிக்கிழமை (04) இடம்பெற்ற மேலதிக தனியார் வகுப்புக்களிலேயே இவ்வாறு வினாத்தாள் வெளியிடப்பட்டுள்ளது.

அநுராதபுரம் மற்றும் பொலன்னறுவை ஆகிய இரு மாவட்டங்களிலும் இது தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் ஒரு பிரச்சினையாகக் காணப்படுகிறது. கடந்த வாரம் 6 மற்றும் 7ஆம் வகுப்பு மாணவர்களின் பரீட்சை வினாத்தாள்கள் வெளியாகியிருந்தன.

வினாத்தாளை வெளியிட்ட ஆரிசியை ஒருவர் அதனை அரசியல் கட்சியொன்றின் வட்ஸ்அப் சமூக வலைத்தள குழுவில் பகிர்ந்துள்ளதை ஏற்றுக் கொண்டிருக்கின்றார்.

இவ்வாறு வெளியான 3 வினாத்தாள்களால் 3 இலட்சம் ரூபா நஷ்டமாகும். எனவே இவ்வாறான குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு தகுதி தராதரம் இன்றி தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment