ரஷ்ய இராணுவப் பணியில் இதுவரை 12 இந்தியர்கள் உயிரிழப்பு - News View

About Us

About Us

Breaking

Friday, January 17, 2025

ரஷ்ய இராணுவப் பணியில் இதுவரை 12 இந்தியர்கள் உயிரிழப்பு

ரஷ்ய நாட்டு இராணுவத்தில் பணியில் உள்ள இந்தியர்களில் 12 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், 16 பேர் மாயமாகி உள்ளனர். இந்த தகவலை இந்திய அரசிடம் ரஷ்யா தெரிவித்துள்ளது.

“ரஷ்ய நாட்டு இராணுவத்தில் 126 இந்தியர்கள் பணியில் இருந்தனர். அதில் 96 பேரை ரஷ்யா பணியில் இருந்து விடுவித்தது. அவர்கள் எல்லோரும் தாயகம் திரும்பி உள்ளனர். 12 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். 18 பேர் இன்னும் அங்கு ராணுவ பணியில் உள்ளனர். அதில் 16 பேர் எங்கு உள்ளனர் என்ற விவரம் தெரியவில்லை. அப்படித்தான் ரஷ்யா எங்களிடம் தெரிவித்துள்ளது. எஞ்சியுள்ளவர்களை பணியில் இருந்து விடுவித்து, தாயகம் திரும்புவதற்கான முயற்சிகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம்” என வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.

அண்மையில் யுத்த களத்தில் உயிரிழந்த கேரள மாநிலத்தை சேர்ந்த பினிலின் உடலை இந்தியா கொண்டுவருவதற்கான பணியை மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகம் மேற்கொண்டு வருகிறது. இதில் காயமடைந்த மற்றொரு இந்தியர் மருத்துவ சிகிச்சையில் உள்ளார்.

ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் கடந்த 2022 இல் தொடங்கியது. இதில் உக்ரைன் ராணுவத்துக்கு ஆதரவாக பல்வேறு நாடுகளை சேர்ந்த தன்னார்வலர்கள், உக்ரைனின் பிராந்திய பாதுகாப்புக்கான சர்வதேச படையில் அங்கம் வகித்து வருகின்றனர். 

இந்நிலையில், ரஷ்ய தரப்பில் இந்தியர்கள் நூற்றுக்கணக்கானோர் எல்லையில் போரிட்டு வருவதாக தகவல் வெளியானது. அவர்கள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள்.

இராணுவத்துக்கு உதவியாளர் என சொல்லி அவர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இதில் மோசடியும் நடந்துள்ளது. ரஷ்யாவில் சிக்கிய சிலரை இந்தியா விடுவித்து, தாயகம் அழைத்து வந்தது. அந்த நாட்டு இராணுவத்தில் இந்தியர்கள் பணியாற்றும் தகவல் கடந்த ஆண்டு தெரியவந்தது.

No comments:

Post a Comment