நாட்டை வந்தடையவுள்ள 5200 மெற்றிக் தொன் அரிசி ! - News View

About Us

About Us

Breaking

Sunday, December 15, 2024

நாட்டை வந்தடையவுள்ள 5200 மெற்றிக் தொன் அரிசி !

(இராஜதுரை ஹஷான்)

அரசாங்கம் இறக்குமதி செய்ய தீர்மானித்துள்ள 70 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசியில் 5200 மெற்றிக் தொன் முதல் தொகை அரிசி இன்று ஞாயிற்றுக்கிழமை (15) நாட்டை வந்தடையவுள்ளதாக வர்த்தகம், உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

சந்தையில் ஏற்பட்ட திடீர் அரிசி தட்டுப்பாட்டுக்கு குறுகிய காலத் தீர்வாக இந்தியாவில் இருந்து 70 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்யவும், அரிசி இறக்குமதி மீது விதிக்கப்பட்டிருந்த வரையறையை தற்காலிகமாக நீக்குவதற்கும் அரசாங்கம் தீர்மானித்தது.

இதற்கமைய தனியார் இறக்குமதியாளர்கள் இதுவரையான காலப்பகுதிக்குள் 3000 மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்துள்ளதாக சுங்கத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

தனியார் அரிசி உற்பத்தியாளர்கள் இறக்குமதி செய்த அரிசி தொகையில் 75,000 கிலோ கிராம் அரிசி மனித பாவனைக்கு உகந்ததற்றதுடன், குறித்த அரிசி மூட்டைகளில் அரிசி உற்பத்தி திகதி, காலாவதியாகும் திகதி உட்பட உற்பத்தி நிறுவனத்தின் விபரம் தொடர்பான விபரங்கள் திரிபுப்படுத்தபட்டுள்ளதாக குறிப்பிட்டு சுங்கத் திணைக்களம் 75 ஆயிரம் கிலோ கிராம் அரிசி அடங்கிய கொள்கலன்களை விடுவிக்க சுங்கத் திணைக்களம் மறுத்துள்ளது.

இந்த 75 ஆயிரம் கிலோ கிராம் அரிசித் தொகைளை மீள் ஏற்றுமதி செய்யுமாறு சுங்கத் திணைக்களம் உரிய இறக்குமதியாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. மீள் ஏற்றுமதி செய்யாவிடின் அந்த அரிசி தொகையை அரசுடமையாக்கி, அழிப்பதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசியை லங்கா சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக கட்டுப்பாட்டு விலைக்கு விநியோகிப்பதற்கு வர்த்தக அமைச்சு தீர்மானித்துள்ளது.

அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை தொடர்பில் அரிசி இறக்குமதியாளர் சங்கத்தினர் மாறுப்பட்ட கருத்துக்களை முன்வைத்துள்ளனர். தொகை விலையில் காணப்படும் பிரச்சினையால் அரிசியை விநியோகிக்க முடியாத சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆகவே தொகை விலையை திருத்தம் செய்ய பிரசுரிக்கப்பட்டுள்ள வர்த்தமானியை மீளப்பெறுமாறு வலியுறுத்தியுள்ளனர்.

இருப்பினும் சிறு மற்றும் நடுத்தர அரிசி உற்பத்தியாளர்கள் கட்டுப்பாட்டு விலை நிர்ணய வர்த்தமானி அறிவித்தலை மீளப்பெறாமல், நிர்ணயிக்கப்பட்ட வகையில் கட்டுப்பாட்டு விலையை அமுல்படுத்துமாறு குறிப்பிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment