(இராஜதுரை ஹஷான்)
மின் கட்டண திருத்தம் தொடர்பில் இலங்கை மின்சார சபை முன்வைத்துள்ள பரிந்துரைகள் குறித்து பொதுமக்கள் தமது அபிலாசைகள் மற்றும் யோசனைகள் செவ்வாய்க்கிழமை (17) முதல் எதிர்வரும் ஜனவரி மாதம் 08ஆம் திகதி புதன்கிழமை வரை முன்வைக்க முடியும்.
மின் கட்டணம் திருத்தம் குறித்து கிடைக்கப் பெறும் ஆலோசனைகள் மற்றும் யோசனைகளை பரிசீலனை செய்து, தொழில்நுட்ப காரணிகளை அடிப்படையாகக் கொண்டு மின் கட்டணம் தொடர்பான இறுதித் தீர்மானத்தை எதிர்வரும் ஜனவரி மாதம் 17 ஆம் திகதி அறிவிப்பதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
இலங்கை மின்சார சபை 2025ஆம் ஆண்டின் முதல் 6 மாத காலப்பகுதிக்கு தற்போது அமுலில் உள்ள மின் கட்டணத்தை மாற்றமின்றி தொடர்ந்து அமுல்படுத்துவதற்கு முன்மொழிந்துள்ளது.
இலங்கை மின்சார சபை முன்மொழிவு மற்றும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் ஸ்திர ஊழியர்களின் பரிந்துரைகள் (எதிர் முன்மொழிவு) தொடர்பாக பொதுமக்கள் தமது கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை செவ்வாய்க்கிழமை முதல் முன்வைக்க முடியும்.
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவானது 2002ஆம் ஆண்டின் 35ஆம் இலக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு சட்டத்தின் பிரிவு 17(பி), 2009ஆம் ஆண்டின் 20ஆம் இலக்க இலங்கை மின்சார சட்டத்தின் பிரிவு 30 மற்றும் மின்சார கட்டண முறைமை (விலைச் சூத்திரம்) ஆகியவற்றின் பிரகாரம் பொதுமக்களிடமிருந்து ஆலோசனைகளை கோருகிறது.
இதற்கமைய பொதுமக்கள் நாளை முதல் தமது ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களை முன்வைக்க முடியும்.
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ (info@pucsl.gov.lk) மின்னஞ்சல் முகவரி, 076.427 1030 என்ற வட்ஸ்அப் இலக்கம், www.facebook.com/pucsl என்ற முகப் புத்தக கணக்கு ஊடாகவும் அல்லது மின்சார கட்டணம் குறித்த பொது ஆலோசனை - இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு 6ஆவது மாடி, இலங்கை வங்கி வர்த்தக கோபுரம், கொழும்பு-03 என்ற முகவரி ஊடாகவும் கருத்துக்கள் மற்றும் யோசனைகளை முன்வைக்க முடியும்.
No comments:
Post a Comment