ஆட்சியாளர்களின் அனுபவமின்மையே காரணம் என்கிறார் வஜிர அபேவர்த்தன - News View

About Us

About Us

Breaking

Tuesday, December 31, 2024

ஆட்சியாளர்களின் அனுபவமின்மையே காரணம் என்கிறார் வஜிர அபேவர்த்தன

(எம்.ஆர்.எம்.வசீம்)

நாட்டில் அரிசி, தேங்காய் போன்ற அடிப்படை பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் விலை அதிகரிப்புக்கு, ஆட்சியாளர்களின் அனுபவமின்மை மற்றும் முகாமைத்துவம் செய்துகொள்ள முடியாமையே காரணமாகும். இந்த நிலை ஏற்படும் என்பதாலே அனுபவமுள்ளவர்களை பாராளுமன்றத்துக்கு அனுப்புமாறு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்து வந்தார். ரணில் விக்ரமசிங்க தெரிவித்த விடயம் தற்போது உண்மையாகியுள்ளது என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்த்தன தெரிவித்தார்.

காலியிலுள்ள ஐக்கிய தேசிய கட்சி காரியாலயத்தில் திங்கட்கிழமை (30) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், நாட்டை ஆட்சி செய்யக்கூடிய ஆட்சியாளர்களுக்கு அனுபவம் மிக முக்கியமாகும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்ந்து தெரிவித்து வந்திருந்தார். அனுபவமுள்ளவர்களை பாராளுமன்றத்துக்கு அனுப்புமாறு கடந்த பொதுத் தேர்தலின்போது அவர் தெரிவித்து வந்தபோது அவரை கேலி செய்தார்கள்.

ரணில் விக்ரமசிங்க அவ்வாறு தெரிவித்து வந்ததை திருட்டு நடவடிக்கையாக தெரிவித்து மக்களை ஏமாற்றி வந்தார்கள். தற்போது நாட்டு மக்கள் பாரிய பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்துள்ளனர்.

குறிப்பாக தேங்காய் விலை எப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது. குரங்கு பிரச்சினையாலே தேங்காய் விலை அதிகரிப்புக்கு காரணம் என தெரிவிக்கின்றனர். ஆனால் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் குரங்கும் இருந்து ரணிலும் இருந்தார். தேங்காயும் இருந்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

அதேபோன்று அசிரி பிரச்சினையும் தற்போது பாரியளவில் தலைதூக்கி இருக்கிறது. ஆனால் மக்கள் பொருளாதார நெருக்கடியில் இருக்கும்போது அந்த மக்களுக்கு நிவாரணமாக அனைத்து தேர்தல் தொகுதிகளிலும் தெரிவு செய்யப்பட்ட மக்களுக்கு இலவசமாக அரிசி வழங்குவதற்கு ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்திருந்தார் என்பதையும் மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

அன்று மக்களுக்கு இலவசமாக அரிசி பகிர்ந்தளிக்கும்போதும் தற்போதுள்ள பிரதான அரிசி ஆலை உரிமையாளர்கள் 5 பேரும் அன்றும் இருந்தார்கள். குறித்த பிரதான அரிசி ஆலை உரிமையாளர்களும் நூற்றுக்கு 26 வீத அரிசியையே விநியோகித்து வருகின்றனர். எஞ்சிய நூற்றுக்கு 76 வீத அரிச விநியோகத்தை ஏனைய அரிசி ஆலை உரிமையாளர்களே விநியோகித்து வருக்கின்றனர்.

ஆனால் சரியான முகாமைத்துவம் இல்லாமல்போகும் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். அனுபமில்லாதவர்களின் செயற்பாடு காரணமாக அரிசி தட்டுப்பாட்டால் இன்று மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சாதாரண ஒரு ஹோட்டலுக்கு வேலைக்கு ஒருவரை அமர்த்தும்போது, அவருக்கு அடிப்படையான தொழில் பயிற்சி வழங்கி, முறையாக அவரை குறித்த தொழிலில் படிப்படியாக உயர் பதவிக்கு நியமிக்கப்படுகிறார்.

ஆனால் நாட்டை நிர்வகித்து, மக்களின் பொறுப்புகளை நிறைவேற்றுவதற்கு எந்த அனுபவமும் இல்லாதவர்களுக்கு பொறுப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதனால் தற்போது அதனை நாங்கள் அனுபவிக்கவே வேண்டி இருக்கிறது. வேறு வழியில்லை.

எனவே நாட்டில் அரிசி, தேங்காய் போன்ற அடிப்படை பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் விலை அதிகரிப்புக்கு, ஆட்சியாளர்களின் அனுபவமின்மை மற்றும் முகாமைத்துவம் செய்துகொள்ள முடியாமையே காரணமாகும். இந்த நிலை ஏற்படும் என்பதாலே அனுபவமுள்ளவர்களை பாராளுமன்றத்துக்கு அனுப்புமாறு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்து வந்தார்.

ஆனால் மக்கள் எமது கருத்தை நிகாரித்துவந்தார்கள். என்றாலும் நாட்டுக்கு பிரச்சினை ஏற்படும்போது, அதிகாரத்தில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அதற்கு கைகொடுப்பதற்கு ரணில் விக்ரமசிங்க தயாராக இருக்கிறார் என்பதை அவர் தெரிவித்திருக்கிறார் என்றார்.

No comments:

Post a Comment