கல்வி தகைமையில் ஜனாதிபதியும் பொறுப்புக்கூற வேண்டும் : ஏனைய எம்.பி.க்களும் உண்மையை வெளிப்படுத்த வேண்டும் - ஆஷூ மாரசிங்க - News View

About Us

Add+Banner

Breaking

  

Sunday, December 15, 2024

demo-image

கல்வி தகைமையில் ஜனாதிபதியும் பொறுப்புக்கூற வேண்டும் : ஏனைய எம்.பி.க்களும் உண்மையை வெளிப்படுத்த வேண்டும் - ஆஷூ மாரசிங்க

image_d1f675eb57%20(Custom)%20(Custom)
(எம்.மனோசித்ரா)

சபாநாயகரின் கல்வி தகைமை தொடர்பான சர்ச்சையால் சகல பாராளுமன்ற உறுப்பினர்கள் மீதும் மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மீது கொண்டிருந்த நம்பிக்கைக்காகவே மக்கள் புதிய முகங்களுக்கு வாக்களித்தனர். எனவே இவ்விவகாரத்தில் ஜனாதிபதியும் பொறுப்புக்கூற வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆஷூ மாரசிங்க தெரிவித்தார்.

கொழும்பில் சனிக்கிழமை (14) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், பாராளுமன்றத்தில் பட்டதாரிகளும், கலாநிதிகளும், பேராசிரியர்களும் மாத்திரம் இருக்க வேண்டும் என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. பாராளுமன்றத்தில் மக்களுக்காக சேவையாற்றக் கூடிய நேர்மையான மனிதர்களே தேவை.

தற்போதிருப்பவர்களின் சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க மிகவும் நேர்மையானவர். தனது அரசியல் பயணத்தால் பட்டப்படிப்பை நிறைவு செய்ய முடியவில்லை என்பதை நேர்மையாக வெளிப்படையாகக் குறிப்பிட்டிருக்கின்றார்.

அதேபோன்று சாமர சம்பத் தசநாயக்க முதலமைச்சராகவும், இராஜாங்க அமைச்சராகவும் பதவி வகித்திருக்கின்றார். ஆனால் தான் இரண்டு அல்லது மூன்றாம் வகுப்பு வரை மாத்திரமே கற்றிருப்பதாக அவரும் வெளிப்படையாகக் குறிப்பிட்டிருக்கின்றார்.

அதேபோன்று தற்போதைய பாராளுமன்றத்திலுள்ள ஏனைய அனைத்து எம்.பி.க்களும் தமது கல்வி தகைமை தொடர்பில் உண்மையை வெளிப்படுத்த வேண்டும்.

பாராளுமன்றத்தில் பதவிகள் அவசியமில்லை. நாட்டுக்கான சட்டத்தை தயாரிப்பதற்கான நேர்மையான மனப்பாங்கு போதுமானது.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் ஊடாக தற்போதுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் உண்மையில் யார் என்பதை நாம் அறிந்து கொள்ள நடவடிக்கை எடுப்போம். அவ்வாறில்லை என்றால் மூன்றில் இரண்டு பெரும்பான்மை நாட்டுக்கு பெரும் பிரச்சினையாக மாறிவிடும்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும் இதற்கு பொறுப்பு கூற வேண்டும். காரணம் மக்கள் அவர் மீது கொண்ட நம்பிக்கையிலேயே அனைவருக்கும் வாக்களித்திருக்கின்றனர் என்றார்.

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *