(இராஜதுரை ஹஷான்)
ஜனாதிபதி நிதியத்தில் இருந்து முறையற்ற வகையில் நிதி பெற்ற அரசியல்வாதிகளின் பெயர்ப்பட்டியலை அரசாங்கம் முழுமையாக வெளியிட வேண்டும். உரிய விசாரணைகளை மேற்கொண்டு நிதியை மீள அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.
எதுல்கோட்டையில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, ஜனாதிபதி நிதியத்தில் இருந்து நிதி பெற்ற அரசியல்வாதிகளின் பெயர்ப்பட்டியலை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. இதனால் ஒட்டு மொத்த அரசியல்வாதிகளும் ஜனாதிபதி நிதியத்தில் இருந்து நிதி பெற்றுள்ளதாக மக்கள் மத்தியில் தவறானதொரு நிலைப்பாடு தோற்றுவிக்கப்பட்டுள்ளது.
ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு உதவியளிப்பதற்கும், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் 1978 ஆம் ஆண்டு ஜனாதிபதி நிதியம் ஸ்தாபிக்கப்பட்டது. 2005 - 2024 வரையான காலப்பகுதியில் அரசியல் அதிகாரத்துடன் அரசியல்வாதிகள் ஜனாதிபதி நிதியத்தில் இருந்து கோடிக்கணத்தில் நிதி பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
முறையற்ற வகையில் நிதி பெற்றவர்களின் முழு விபரத்தையும் அரசாங்கம் வெளியிட வேண்டும்.அத்துடன் உரிய விசாரணைகளை மேற்கொண்டு அந்நிதியை மீள அறவிட வேண்டும் என்பதை அரசாங்கத்திடம் வலியுறுத்துகிறேன்.
தேசிய மக்கள் சக்தி 75 ஆண்டு கால அரசியல் கலாச்சாரத்தையும் விமர்சித்துதான் ஆட்சிக்கு வந்தது. ஆகவே கடந்த காலங்களில் முன்வைத்த குற்றச்சாட்டுக்களை சட்டத்தின் முன் ஆதாரபூர்வமாக நிரூபிக்கும் பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு என்றார்.
No comments:
Post a Comment