ரோஹண விஜேவீரவின் குடும்பத்தாரது பராமரிப்புக்கு அரசாங்கம் செலவிட்ட தொகை எவ்வளவு ? : கேள்வியெழுப்பியுள்ள ஜானக வக்கும்பர - News View

About Us

About Us

Breaking

Wednesday, December 25, 2024

ரோஹண விஜேவீரவின் குடும்பத்தாரது பராமரிப்புக்கு அரசாங்கம் செலவிட்ட தொகை எவ்வளவு ? : கேள்வியெழுப்பியுள்ள ஜானக வக்கும்பர

(எம்.மனோசித்ரா)

மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் ரோஹண விஜேவீரவின் மரணத்துக்கு பின்னர் அவரது குடும்பத்தார் கடற்படை முகாமிலேயே பராமரிக்கப்பட்டனர். அதற்கு மக்களின் வரிப் பணமே செலவிடப்பட்டது. அது தவறில்லை என்றால் ஜனாதிபதி நிதியத்திலிருந்து சட்ட ரீதியாக உதவிப் பணம் பெற்றது எவ்வாறு தவறாகுமென முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்பர அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவிடம் கேள்வியெழுப்பினார்.

கொழும்பில் புதன்கிழமை (25) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், தமது வாழ்க்கைச் செலவு குறைவடை வேண்டும் என்பதையே ஆட்சி மாற்றத்தின் ஊடாக மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அவ்வாறு எந்தவொரு மாற்றத்தையும் அவதானிக்கக் கூடியதாக இல்லை.

கடந்த அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட திட்டங்களின் காரணமாகவே இன்று நாடு வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டிருக்கின்றது. ஆனால் தற்போது அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதே தவிர, குறைவடையவில்லை.

இன்று உப்பைக் கூட இறக்குமதி செய்து அதிக விலைக்கு விற்பனை செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. அன்று மஞ்சள் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டபோது கடும் எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்டன. ஆனால் இன்று மஞ்சள் உற்பத்தியில் நாம் தன்னிறைவடைந்துள்ளோம்.

அவ்வாறிருக்க நாட்டைச் சூழ கடலை வைத்துக்கொண்டு உப்பை இறக்குமதி செய்யும் நிலைமைக்கு குறுகிய காலத்துக்குள் இந்த அரசாங்கம் வீழ்ச்சியடைந்துள்ளது.

எனவே குறைந்தபட்சம் எம்மால் ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டங்களையாவது தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

அவ்வாறில்லை என்றால் உப்பைப் போன்று ஏனைய அத்தியாவசிய உணவு பொருட்களையும் இறக்குமதி செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டுவிடும்.

நீங்கள் கேட்டதைப் போன்று மக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்கியிருக்கின்றார்கள். எனவே வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள்.

ஜனாதிபதி நிதியத்திடமிருந்து தவறான வழியில் உதவித் தொகையைப் பெற்றிருந்தால் மாத்திரமே அதனைக் குற்றமெனக் கூற முடியும். ஆனால் இதுவரை சட்ட ரீதியாகவே அனைவரும் உதவித் தொகையைப் பெற்றிருக்கின்றனர்.

முன்னாள் பிரதமர் தி.மு. ஜயரத்னவும் ஜனாதிபதி நிதியத்திலிருந்து உதவித் தொகை பெற்றிருக்கின்றார். ஆனால் அவர் தற்போது உயிருடனில்லை. இறந்தவர்களை இவ்வாறு நிந்திக்க வேண்டாம் என்று அரசாங்கத்திடம் கோருகின்றோம்.

ரோஹண விஜேவீர இறந்துவிட்டார். ஆனால் அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் உள்ளிட்ட குடும்பத்தார் கடற்படை முகாமில் நீண்ட காலம் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அதற்கு ஜே.வி.பி. பணம் வழங்கியதா? மக்களின் வரிப் பணத்திலேயே அவர்களும் பராமரிக்கப்பட்டனர்.

இவர்களுக்காக அரசாங்கம் எவ்வளவு செலவிட்டது என்ற தகவலை வெளியிடுமாறு அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவுக்கு சவால் விடுக்கின்றேன். மாறாக அவர்கள் அரசாங்கத்தின் செலவில் பராமரிக்கப்படவில்லை என்றால் நான் மன்னிப்பு கோருகின்றேன் என்றார்.

No comments:

Post a Comment