காசாவில் உடன் போர் நிறுத்தத்திற்கு ஐ.நா. பொதுச் சபையில் தீர்மானம் : தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்களில் கொல்லப்பட்டும் பலஸ்தீனர்கள் - News View

About Us

About Us

Breaking

Thursday, December 12, 2024

காசாவில் உடன் போர் நிறுத்தத்திற்கு ஐ.நா. பொதுச் சபையில் தீர்மானம் : தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்களில் கொல்லப்பட்டும் பலஸ்தீனர்கள்

காசாவில் உடனடியாக மற்றும் நிபந்தனையற்ற போர் நிறுத்தம் ஒன்றுக்கு ஐ.நா. பொதுச் சபையில் அதிகப் பெரும்பான்மை ஆதரவுடன் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்ட போதும் இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடரும் நிலையில் மேலும் பல பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

காசாவில் நேற்று காலை இடம்பெற்ற இஸ்ரேலிய வான் தாக்குதல்களில் குறைந்தது 35 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டுள்ளது.

காசா நகரில் அல் ஜலால் வீதியில் உள்ள குடியிருப்பு கட்டடத்தில் இடம்பெற்ற இஸ்ரேலின் குண்டு வீச்சில் கொல்லப்பட்ட ஏழு பேரில் சிறுவர்கள் மற்றும் பெண்களும் இருப்பதாக வபா குறிப்பிட்டது.

மத்திய காசாவில் நுசைரத் அகதி முகாமின் மேற்காக உள்ள இடம்பெயர்ந்தவர்கள் அடைக்கலம் பெற்ற வீடு ஒன்றின் மீது இடம்பெற்ற தாக்குதலில் 15 பேர் பலியாகியுள்ளனர்.

தெற்கு காசாவில் உள்ள ரபா நகரின் மேற்குப் பகுதியில் மக்களுக்கு உதவிகள் விநியோகிக்கப்படும் இடத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 13 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு மேலும் பலர் காயமடைந்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

முன்னதாக ரபாவில் இடம்பெற்ற தாக்குதலில் குறைந்தது 30 பேர் காயமடைந்திருப்பதாகவும் பலரும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும் மருத்துவ வட்டாரங்களை மேற்கோள்காட்டி ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.

இதன் அருகாமை நகரான கான் யூனிஸில் உதவி விநியோகங்களுக்கான பாதுகாப்பை வழங்கி வந்தவர்கள் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர். இங்கு இடம்பெற்ற வெவ்வேறு வான் தாக்குதல்களில் பலரும் காயமடைந்ததாக மருத்துவ வட்டாரம் கூறியது.

காசாவுக்குள் வரும் உதவி பொருட்களை ஆயுதம் ஏந்திய கும்பல்கள் கொள்ளையிட முயற்சிக்கும் நிலையில் அவர்களிடம் இருந்து பாதுகாப்பு அளிக்க ஹமாஸ் உறுப்பினர்கள் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான ஆயுத கும்பல்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் பலரும் ஹமாஸ் படையின் தாக்குதல்களில் அண்மைய மாதங்களில் கொல்லப்பட்டதாக ஹமாஸ் தரப்பு மற்றும் மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

காசாவில் போர் வெடித்த கடந்த ஆண்டு ஒக்டோபர் தொடக்கம் உதவி வாகனங்களுக்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட குறைந்தது 700 பொலிஸ் படையினர் இஸ்ரேலிய தாக்குதல்களில் கொல்லப்பட்டிருப்பதாக ஹமாஸ் குறிப்பிட்டுள்ளது.

பதினான்கு மாதங்களாக நீடிக்கும் இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதல்களில் காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 44,835 ஆக அதிகரித்திருப்பதோடு மேலும் 106,356 பேர் காயமடைந்திருப்பதாக காசா சுகாதார அமைச்சு நேற்று வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காசாவில் போர் நிறுத்தம் ஒன்றை எட்டுவதில் அமெரிக்காவின் ஆதரவுடன் எகிப்து மற்றும் கட்டார் மத்தியஸ்தர்களால் கடந்த பல மாதங்களாக முன்னெடுக்கப்படும் முயற்சிகள் இதுவரை வெற்றி காணவில்லை.

இந்நிலையில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் கடந்த புதன்கிழமை (11) இடம்பெற்ற வாக்கெடுப்பில் உடனடியாக, நிபந்தனையற்ற மற்றும் நிரந்த போர் நிறுத்தம் ஒன்றை வலியுறுத்தும் தீர்மானத்திற்கு அதிகப் பெரும்பான்மை வாக்குகள் கிடைத்தன.

இதன்போது காசாவில் இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன போராட்ட அமைப்பான ஹமாஸ் இடையே உடன் போர் நிறுத்தம் ஒன்றை எட்டவும் அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிக்கவும் வலியுறுத்தப்படது.

பொதுச் சபை தீர்மானத்தை நிறைவேற்றும் கடப்பாடு இல்லாதபோதும் அது போர் தொடர்பில் சர்வதேச நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதாக பார்க்கப்படுகிறது.

இந்தப் போர் நிறுத்த தீர்மானத்திற்கு எதிராக அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் மேலும் ஏழு நாடுகளே வாக்களித்ததோடு 13 நாடுகள் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை. இதற்கு 158 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன.

No comments:

Post a Comment