கட்சிக்காக கடுமையாக உழைத்த எரான் விக்கிரமரத்ன, ஹிருணிக்கா ஆகியோருக்கு தேசியப்பட்டியலை பெற்றுக் கொடுக்க முயற்சிக்கிறோம். தேசியப்பட்டியல் விவகாரத்துக்கு வெகுவிரைவில் தீர்வு காண வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளேன் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை இடம்பெற்ற அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தில் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் விவகாரத்துக்கு வெகுவிரைவில் தீர்வு காண வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளேன். கட்சிக்காக கடுமையாக உழைத்த எரான் விக்கிரமரத்ன, ஹிருணிக்கா பிரேமசந்திர ஆகியோர் குறைந்த எண்ணிக்கையிலான வாக்குகளிலேயே தோல்வியடைந்தார்கள். இவர்களுக்கு தேசியப்பட்டியல் ஆசனத்தை பெற்றுக் கொடுக்க முயற்சிக்கிறோம்.
ஜனாதிபதியின் உரையில் பல விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. சர்வதேச நாணய நிதியத்துடனான செயற்திட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இதனையே நாங்கள் ஆரம்பத்தில் இருந்து குறிப்பிட்டு வருகிறோம்.
வெளிவிவகார கொள்கை தொடர்பில் ஜனாதிபதி தனது கொள்கை பிரகடனத்தில் தெளிவாக குறிப்பிடவில்லை. ஆகவே இது சற்று அவதானிக்க கூடியதொரு விடயமாகும். அரசாங்கம் எவ்வகையான வெளிவிவகாரக் கொள்கையை கடைப்பிடிக்கவுள்ளது என்பதை வெளிப்படுத்த வேண்டும்.
அரிசி தட்டுப்பாட்டுக்கு அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அரிசி இறக்குமதி செய்யப்படும்போது பெரும் அரிசி ஆலையாளர்கள் பயனடைவார்கள். இவ்விடயத்தில் அரசாங்கம் நீண்டகால கொள்கைத் திட்டத்துக்கு அமைய தீர்மானங்களை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளேன் என்றார்.
No comments:
Post a Comment