(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
மக்கள் பாரிய எதிர்ப்பார்ப்புடனே எமக்கு வாக்களித்துள்ளார்கள். மக்களின் நம்பிக்கை சிறிதளவேனும் சிதைவடையாது பாதுகாத்துக் கொள்ள கடமைப் பொறுப்புக்களை நிறைவேற்ற முயற்சிப்பேன் என பிரதி சபாநாயகர் வைத்தியர் ரிஸ்வி சாலி தெரிவித்தார்.
10ஆவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத் தொடர் வியாழக்கிழமை சம்பிரதாய முறைப்படி ஆரம்பிக்கப்பட்டு, ஜனாதிபதியின் கொள்கை உரைக்கு பின்னர் ஊடகங்களு்ககு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், பிரதி சபாநாயகர் பதவிக்கு நான் தெரிவு செய்யப்பட்டதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன். என்றாலும் பாராளுமன்றத்துக்கு முதல் தடவையாகவே இந்தமுறை தெரிவு செய்யப்பட்டு வந்தவன் என்ற வகையில், இந்த பதவியை கொண்டு நடத்த எனக்கு அனுபவம் இல்லை.
என்றாலும் குறுகிய காலத்துக்குள் பிரதி சபாநாயகரின் கடமை பொறுப்புக்களை தெரிந்துகொண்டு, சிறந்த முறையில் இந்த பொறுப்பை நிறைவேற்ற முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
மக்கள் இந்த பாராளுமன்றத்தில் சிறந்த மாற்றம் ஒன்றை எதிர்பார்த்தே எமக்கு வாக்களித்துள்ளார்கள். அதனால் மக்களின் நம்பிக்கை சிறிதளவேனும் சிதைவடையாத வகையில் பாராளுமன்றத்தில் எனது பொறுப்புகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பேன்.
சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டிருக்கும் அசோக சபுமல் ரன்வலவும் புதிய உறுப்பினர். அதனால் நாங்கள் விரைவாக சபாநாயகரின் வகிபாங்கள் தொடர்பில் அறிந்துகொண்டு பாராளுமன்றத்தில் பக்கச்சார்பின்றி நிலையியற் கட்டளைகளுக்கு உட்பட்டு மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்போம் என்றார்.
No comments:
Post a Comment