தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் செல்ல மாட்டேன் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்
நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த சுமந்திரனுக்கு தேசியப்பட்டியல் ஆசனம் வழங்கப்படலாம் என்று பரவலாகப் பேசப்பட்டுவந்த நிலையில், தேசியப்பட்டியல் ஆசனம் மூலம் நாடாளுமன்றம் செல்லமாட்டேன் என்று தற்பொழுது சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, தமிழரசுக் கட்சியின் மத்திய குழுவின் தீர்மானத்திற்கு கட்டுப்படுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.
சற்று முன்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
மக்களால் தெரிவு செய்யப்பட்டால் மாத்திரமே தான் நாடாளுமன்றம் செல்வேன் என்றும், கட்சியின் மத்திய குழுவே தேசியப்பட்டியல் ஆசனத்தை தீர்மானிக்கும் என்றும் கூறிய சுமந்திரனிடம், ‘ஒருவேளை மத்திய குழு தேசியப்பட்டியலுக்காக உங்களைத் தெரிவு செய்தால் என்ன செய்வீர்கள்’ என்று ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தார்கள்.
தமிழரசுக் கட்சியின் மத்திய குழுவின் முடிவுக்கு முழுமையாகக் கட்டுப்படுவேன் என்றும் அவர் கூறியிருந்தார்.
யாழ்ப்பாணத்திலும், வன்னியிலும் தமிழரசுக் கட்சியின் தோல்வியை ஏற்றுக் கொள்வதாகத் தெரிவித்த சுமந்திரன், தனது தோல்வி பற்றிக் குறிப்பிடும் பொழுது ‘மக்களின் தெரிவை மதிக்கிறேன், ஏற்றுக் கொள்கிறேன்’ என்று தெரிவித்தார்.
அரசியலில் தொடர்ந்து ஈடுபடப்போவதாகவும், புதிய அரசியலமைப்பை உருவாக்குதல் தொடர்பான விடயங்களில் தனது பங்களிப்பு இருக்கும் என்றும் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment