சொத்துப் பிரகடனங்களை பகிரங்கப்படுத்தும்போது அத்தியாவசிய தகவல்களை நீக்க வேண்டாம் - வலியுறுத்தும் TISL - News View

About Us

About Us

Breaking

Wednesday, September 11, 2024

சொத்துப் பிரகடனங்களை பகிரங்கப்படுத்தும்போது அத்தியாவசிய தகவல்களை நீக்க வேண்டாம் - வலியுறுத்தும் TISL

ஜனாதிபதி உள்ளிட்ட 100 க்கும் அதிகமான உயர் அதிகாரிகளின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் பிரகடனங்கள் தற்பொழுது இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் (CIABOC) சொத்துப் பிரகடன இணையப்பக்கத்தில் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளன.

இதனை 2023 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் (ACA) கீழ் சொத்துப் பிரகடனங்களைப் பகிரங்கப்படுத்துவதற்கான ஒரு மையப்படுத்தப்பட்ட இலத்திரனியல் கட்டமைப்பை நிறுவும் வரையான ஓர் இடைக்கால நடவடிக்கையாகக் கருதமுடியும்.

வெளிப்படைத் தன்மையை அதிகரிப்பதற்கான இந்த நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கது என்றாலும், பகிரங்கப்படுத்தப்பட்ட தகவல்களின் அளவு குறித்து கவலைகள் எழுப்பப்பட்டுள்ளன.

இந்தப் பிரகடனங்களை பகிரங்கப்படுத்தும்போது அதிலுள்ள குறிப்பிடத்தக்க அளவு முக்கியமான தகவல்களை தன்னிச்சையாகவும் தேவையற்ற முறையிலும் நீக்கியுள்ளமை குறித்து TISL நிறுவனம் அதிருப்தியை வெளிப்படுத்துகிறது.

வங்கிக் கணக்கு நிலுவைகள் மற்றும் அந்தக் கணக்குகள் திறக்கப்பட்ட திகதிகள் போன்ற தகவல்கள் நீக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக, இந்த செயல்முறையிலுள்ள வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறன் குறித்து கடுமையான சிக்கல்கள் எழுந்துள்ளன.

ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் பிரிவு 88 (1) இன் படி, சொத்துப் பிரகடனங்களைப் பகிரங்கப்படுத்தும்போது பின்வரும் குறிப்பிடப்பட்ட தகவல்கள் மாத்திரமே திருத்தம் மூலம் நீக்க முடியும்.

அ. அறிவிப்பாளரின் அல்லது அறிவிப்பாளரால் சொத்துக்கள் அறிவிக்கப்படும் வேறு எந்த நபரின் வசிப்பிட முகவரி.

ஆ. நில உடைமை அமைந்துள்ள தொகுதி மற்றும் மாவட்டம் தொடர்பான தகவல்களைத் தவிர அறிவிக்கப்பட்ட நில உடைமையின் முழு முகவரி/கள்.

இ. பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஆட்களை அடையாளம் காணும் நோக்கத்திற்காக பயன்படுத்தும் பிறந்த திகதி, தேசிய அடையாள அட்டை இலக்கம், கடவுச்சீட்டு இலக்கம் அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகளினால் அங்கீகரிக்கப்பட்ட வேறு ஏதேனும் இலக்கம்.

ஈ. வங்கிக் கணக்கு இலக்கங்கள் அல்லது

உ. வேறு ஏதேனும் வைப்பு விவரங்கள்

இந்தப் பிரிவை மிகவும் பரந்த அளவில் பொருள்கோடல் செய்து, வங்கிக் கணக்கு நிலுவைகள் மற்றும் திகதிகள் போன்ற முக்கியமான தகவல்களை நீக்குவதற்கு சம்பந்தப்பட்ட ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால் சொத்துப் பிரகடனங்களுக்குப் பொதுமக்கள் அணுகலை வழங்குவதன் நோக்கம் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகத் தோன்றுகின்றது.

மேலே குறிப்பிட்டுள்ள ''வேறு ஏதேனும் வைப்பு விவரங்கள்" என்பது தவறாகப் பொருள்கோடல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகின்றது. வங்கிக் கணக்குகள் அல்லாத ''வேறு'' வைப்பு வகைகளைச் சேர்ப்பதே இந்த ஏற்பாட்டின் நோக்கமாகும்.

வங்கிக் கணக்கு நிலுவைகளை நீக்குவது சட்டத்தின் நோக்கமாக இருந்திருந்தால், 88(1) (ஈ) பிரிவின் மூலம் ''வங்கிக் கணக்கு நிலுவைகள் மற்றும் இலக்கங்கள்'' எனக் குறிப்பிட்டுஅதனைச் செய்திருக்க முடியும்.

சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு இத்தகைய தவறான பொருள்கோடலை வழங்குவது, சொத்துக்களைப் பிரகடனம் செய்யும் முறைமை மற்றும் அவற்றுக்குப் பொதுமக்கள் அணுகலை வழங்கும் நோக்கத்தை தோற்கடிக்கின்றது. இவ்வாறு, அரசாங்க அதிகாரிகள் மற்றும் பொறுப்பான நிறுவனங்கள் சட்டத்தை மீறுவதற்கான துளையை உருவாக்குவது சிக்கலாக உள்ளது.

ஊழல் எதிர்ப்புச் சட்டத்தை வினைத்திறனாக நடைமுறைப்படுத்துவதற்கான இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் அர்ப்பணிப்பு தொடர்பில் இது அவநம்பிக்கையை ஏற்படுத்துகின்றது.

அத்துடன் ஊழல் எதிர்ப்புச் சட்டத்திற்கு அமைய, திருத்தப்பட்டு பகிரங்கப்படுத்தப்பட்டுள்ள சொத்துப் பிரகடனங்களைக் கோரும் நபர்களின் அடையாளத்தை இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

பெயர், தேசிய அடையாள அட்டை எண் மற்றும் தொலைபேசி எண் ஆகியவற்றைப் பெறுவதன் மூலம் இதனை மேற்கொள்ள முடியுமானாலும், அதற்கு மேலதிகமாக மின்னஞ்சல் முகவரியைக் குறிப்பிடுவதையும் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு கட்டாயமாக்கியுள்ளது.

அவ்வாறு மின்னஞ்சல் முகவரியைக் கட்டாயமாக்குவது தேவையற்றது என TISL கருதுகிறது. இதனை, குறிப்பிடத்தக்க நபர்களுக்கு சொத்துப் பிரகடனங்களுக்கான அணுகலைக் கட்டுப்படுத்தும் மேலதிகத் தடையாகக் கொள்ள முடியும்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஊடாகவும் சொத்துப் பிரகடனங்களை பகிரங்கப்படுத்துவதை பரிந்துரை செய்திருந்ததுடன், அது அரசாங்கத்தினால் தயாரிக்கப்பட்ட செயற்திட்டத்தின் ஒரு பகுதியாகும். அரசாங்க அதிகாரிகளால் செய்யக்கூடிய நியாயமற்ற வகையில் செல்வம் ஈட்டுவதை கண்காணிப்பதற்கு பொதுமக்களுக்கு அதிகாரம் அளிப்பதும் இதன் நோக்கங்களில் ஒன்றாகும்.

அவசியமற்ற வகையில் தகவல்களை திருத்தம் செய்து நீக்குவதன் மூலம் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு இந்த நோக்கத்தை அடங்குகின்றது.

இந்தப் பிரகடனங்களுக்கான பொதுமக்கள் அணுகலை வழங்கும் செயன்முறை அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டுமானால், தகவல்களைப் பகிரங்கப்படுத்துவதற்கு முன்னர் நீக்கப்பட்ட தகவல்கள் தொடர்பில் மறுபரிசீலனை செய்யுமாறு TISL, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவிடம் கேட்டுக்கொள்கின்றது.

இந்தச் செயல்பாட்டில், அரச அதிகாரிகள், பிரஜைகளுக்குப் பொறுப்புக் கூறும் நிலையை ஏற்படுத்துவதற்குத் தேவையான முக்கியமான தகவல்களை போதுமான வகையில் வழங்குவது அத்தியாவசியமாகும்.

குற்றச் செயல்களால் ஈட்டப்பட்டுள்ள சொத்துக்கள் மற்றும் நலன்பெறும் உரிமையாளர்கள் தொடர்பாக அறிமுகப்படுத்தப்படவுள்ள சட்டங்களை நடைமுறைப்படுத்தும்போது, பொதுமக்களுக்கு அணுகலை வழங்கியுள்ள சொத்துப் பிரகடனங்களில் உள்ள தகவல்களை வினைத்திறனாகப் பயன்படுத்துவதற்கு மேற்குறிப்பிட்ட நடவடிக்கைகளை விரைவாக எடுப்பது அவசியமாகும்.

No comments:

Post a Comment