நாட்டின் 3 இடங்களில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொஹுவளை
அந்த வகையில், நேற்றிரவு (18), கொஹுவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சரணங்கர வீதிப் பகுதியில் உள்ள கடையொன்றில் இருந்த நபர் ஒருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக கிடைத்த தகவலின் பேரில் கொஹுவளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
காயமடைந்தவர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் 43 வயதுடைய தெஹிவளை, நெதிமால பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்
உயிரிழந்தவர் கடையின் உரிமையாளர் எனவும், மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. கொலைக்கான காரணமோ, சந்தேகநபர்களோ இதுவரை தெரியவில்லை.
இதேவேளை, குறித்த சம்பவத்திற்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளை, கிருலப்பனை பிரதேசத்தில் பொலிஸார் இன்று (19) காலை கண்டுபிடித்துள்ளனர் என மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வரும் கொஹுவல பொலிஸார் தெரிவித்தனர்.
தங்காலை
நேற்றிரவு (18) தங்காலை, நலகம, தெமட்டவெவ பகுதியில் உள்ள தென்னங் காணி ஒன்றில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நிலையில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் வசிக்கும், 33 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் மாடுகளை பராமரிக்கும் உரிமையாளர் எனவும் நேற்றையதினம் மாலை 6.00 மணியளவில் மாடுகளை மீண்டும் அழைத்துவர சென்ற நிலையில் வீடு திரும்பாததை அடுத்து, அவரது சகோதரர் இது தொடர்பில் சென்று பார்த்த வேளையில், குறித்த நபர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நிலையில் இருந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து அவரை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற போதிலும். குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் அறிவித்துள்ளனர்.
குறித்த துப்பாக்கிச் சூடு நாட்டுத் துப்பாக்கியினால் மேற்கொள்ளப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.
இது தனிப்பட்ட தகராறு காரணமாக ஏற்பட்ட கொலையாக இருக்கலாமென பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை. தங்காலை தலைமையக பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மிதிகம
இன்று (19) காலை மிதிகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொவியான பிரதேசத்தில் உள்ள மீன் விற்பனை செய்யும் நபர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பலத்த காயமடைந்த மீன் விற்பனை செய்யும் நபரும் அங்கு மீன் கொள்வனவு செய்ய வந்த மீன் வியாபாரி ஒருவரும், மரணமடைந்த நபரின் நண்பர் ஆகிய இருவரும் காயமடைந்து கராப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆயினும் குறித்த மீன் வியாபாரி உயிரிழந்துள்ளார். அவர் 38 வயதுடைய கொவியாபான பிரதேசத்தைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவரது சகோதரரும் குறித்த பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்றில் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சடலம் கராப்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இக்கொலையானது வெளிநாட்டில் உள்ள திட்டமிட்ட குற்றவாளிகளின் செயல் என தற்போதைய விசாரணையில் தெரிய வந்துள்ளதுடன், சந்தேகநபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை மிதிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment