ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் தமது தேர்தல் செலவு அறிக்கைகளை எதிர்வரும் ஒக்டோபர் 12 ஆம் திகதிக்கு முன்னர் தேர்தல் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்க வேண்டுமென தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அவ்வாறு செய்யாத அனைத்து வேட்பாளர்களுக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
2023 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறைச் சட்டம் கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது முதன்முறையாக அமுல்படுத்தப்பட்டதுடன், ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்பு முடிவடைந்த 21 நாட்களுக்குள் அனைத்து வேட்பாளர்களும் தமது செலவு அறிக்கையை தேர்தல் ஆணைக்குழுவிடம் கையளிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் ஒக்டோபர் 12ஆம் திகதிக்கு முன்னர் தமது செலவு அறிக்கைகளை ஆணைக்குழுவில் சமர்ப்பிக்க வேண்டும்.
உரிய திகதியில் அறிக்கைகளை சமர்ப்பிக்காமல் இருப்பது மற்றும் தவறான அறிக்கைகளை சமர்பிப்பது சட்டப்படி குற்றமென்றும், சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்டுள்ள தண்டனைகளுக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தலைவர் கூறினார்.
அதன்படி, தேர்தல் செலவு அறிக்கையை சமர்ப்பிக்காதவர்கள் அல்லது வரம்பை மீறி செலவு செய்தவர்கள் அல்லது சட்டவிரோத செலவுகள் குறித்து எவரேனும் முறைப்பாடு செய்யலாம். இது தொடர்பில் ஆராய்ந்து சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் சட்ட மாஅதிபர் ஊடாக வழக்குத் தொடரவும் பொலிஸாருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதென்றும் அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment